கிண்டியில் ரூ.487.66 கோடியில் குழந்தைகளுக்கான மருத்துவமனை
சென்னை:கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில், குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகளை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று ஆய்வு செய்தார்.பின், அவர் அளித்த பேட்டி:இங்கு, 6.5 ஏக்கர் பரப்பளவில், 4 லட்சத்து, 38,718 சதுரடி பரப்பளவில், செவிலியர், முதுநிலை மருத்துவ மாணவர் விடுதிகள் உள்ளிட்ட வசதிகளுடன், தரைத்தளம் மற்றும் ஆறு தளங்களுடன், நாட்டிலேயே சிறந்த மருத்துவக்கட்டமைப்புகளோடு குழந்தைகளுக்கான மருத்துவமனையை அமைக்க, முதல்வர் கடந்த வாரம் ஒப்புதல் அளித்து, தன் ஆலோசனைகளையும் வழங்கினார்.இந்த மருத்துவமனை 487.66 கோடி ரூபாய் நிதியில் அமைய உள்ளது; இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில், அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்படும். அடுத்து இரண்டாண்டுகளில், மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதில், குழந்தைகளுக்கான மருத்துவம், குழந்தைகள் தீவிர சிகிச்சை, அறுவை சிகிச்சை, இரைப்பை குடல், எலும்பியல், நரம்பியல், சிறுநீரகவியல், நுரையீரல், இதயவியல் மருத்துவம் என, குழந்தைகளுக்கான பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.