விமானத்தில் சில்மிஷம்: சென்னை வாலிபர் கைது
சென்னை, அக். 11-புதுடில்லியில் இருந்து சென்னைக்கு, 160 பயணியருடன் 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று புறப்பட்டது. அப்போது ஒரு ஆண் பயணி, 37 வயது பெண்ணிடம் அத்துமீற முயன்றுள்ளார். அப்பெண் கூச்சலிட்டதால், சக பயணியர் விமானிக்கு தகவல் கூறினர்.அத்துமீற முயன்றவர், சென்னை வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த ராஜேஷ், 43, என்பதும், சவுகார்பேட்டையைச் சேர்ந்த, 37 வயது பெண்ணை சீண்டியதும் தெரிந்தது.சென்னையில் விமானம் தரை இறங்கியதும், பாதுகாப்பு அதிகாரிகள் ராஜேஷை பிடித்து, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். விமானம் தாமதம்
சென்னையில் இருந்து மலேஷியா தலைநகர் கோலாலம்பூர் செல்லும், மலேஷியன் ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், நேற்று நள்ளிரவு 12:30 மணிக்கு, புறப்பட தயாரானது.அதில் 180 பேர் இருந்தனர். ஓடுபாதையில் விமானம் ஓடத் துவங்கிய போது, விமானியின் கேபின் பகுதியில், இயந்திர கோளாறு ஏற்பட்டதற்கான 'அலர்ட்' அடித்தது.இதையடுத்து, பயணியர் வெளியேற்றப்பட்டனர். விமான பொறியாளர்கள் குழுவினர் வந்து, இயந்திர கோளாறை சரி செய்யும் முயற்சியில் இறங்கினர்.பல மணி நேரமாகியும், கோளாறு சரி செய்யப்படாததால், விமானம் சேவை ரத்து செய்யப்பட்டது. பயணியர் பயணம் மேற்கொள்ள, மாற்று ஏற்பாடு செய்யப்படும் என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.ஒரு கோடி தங்கம்,
இ - சிகரெட்டுகள் பறிமுதல்மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, நேற்று முன்தினம், விமானம் ஒன்று சென்னை வந்தது. அதில், சென்னையைச் சேர்ந்த 4 பேர், சுற்றுலா விசாவில் மலேஷியா சென்று திரும்பி வந்தனர்.சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர்.அதில் 3,220 இ--சிகரெட்டுகள், 700 கிராம் தங்கம், விலை உயர்ந்த ஐ - போன்கள் இருப்பது தெரிந்தது. அதன் சர்வதேச மதிப்பு 1.02 கோடி ரூபாய். அவற்றை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரையும் கைது செய்தனர்.