துாய்மை பணியாளர் நேர்மை வெகுமதி வழங்கி பாராட்டு
சென்னை, துாய்மை பணியாளரின் நேர்மையை பாராட்டி, வெகுமதி மற்றும் புத்தாடையை, துணை முதல்வர் உதயநிதி வழங்கினார். காசிமேடு பகுதியைச் சேர்ந்த மாநகராட்சி துாய்மை பணியாளர் கிளாரா, 38, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் அருகே, கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று முன்தினம் துாய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சாலையில் தங்க செயின் இருந்தது. அதை, திருவான்மியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இத்தகவல் பரவியதால், கிளாராவிற்கு வாழ்த்து குவிந்தது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், 'துாய்மை பணியின்போது கண்டெடுத்த தங்க செயினை நேர்மையோடு காவல்துறையிடம் சகோதரி கிளாரா ஒப்படைத்த செய்தியை பார்த்து நெகிழ்ந்தேன். எளியவர்கள் எப்போதும், நேர்மையின் பக்கம் தான் என்பதற்கு மற்றுமொரு எடுத்துகாட்டாக மின்னிடும் தங்கம் கிளாராவுக்கு என் அன்பும், பாராட்டுகளும்' எனக்கூறியுள்ளார். இந்நிலையில், துாய்மை பணியாளர் கிளாரா மற்றும் அவரது கணவர் மற்றும் மூன்று மகள்களை, தன் அலுவலகத்திற்கு அழைத்து துணை முதல்வர் உதயநிதி பாராட்டினார். வறுமையிலும் நேர்மையாக நடந்து கொண்டதற்கு, வெகுமதி மற்றும் புத்தாடைகள் வழங்கி அனுப்பினார்.