உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தினக்கூலி பணியாளர்கள் எடுக்க சி.எம்.டி.ஏ., புதிய நடவடிக்கை

தினக்கூலி பணியாளர்கள் எடுக்க சி.எம்.டி.ஏ., புதிய நடவடிக்கை

சென்னை,'அவுட்சோர்சிங்' முறையில் நாளொன்றுக்கு, 716 ரூபாய் சம்பளத்தில், தினக்கூலி பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில் ஒவ்வொரு நிலை பணியிடத்தையும் எப்படி நிரப்ப வேண்டும் என்பதற்கு, தனியான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன்படியே பணியிடங்களை நிரப்ப வேண்டும்.சில ஆண்டுகளுக்கு முன் கட்டுமான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக, தினக்கூலி அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததால், தினக்கூலி பணியாளர்களை நேரடியாக நியமிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது. இதன்பின், அலுவலக பணிகள், கணினி உதவியாளர்கள் என பல்வேறு நிலைகளில் ஒப்பந்த முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். எல்காட் நிறுவனம் பரிந்துரைத்த நிறுவனங்களிடம் இருந்து, ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதிலும், அதிக செலவு மற்றும் குறைபாடுகள் காணப்பட்டதால், தினக்கூலி பணியாளர்களை நியமிப்பது நிறுத்தப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட சில பணியிடங்களுக்கு ஒப்பந்த முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், தற்போது, தினக்கூலி அடிப்படையில், 23 பேரை அனுப்புவதற்கான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகளில் சி.எம்.டி.ஏ., ஈடுபட்டுள்ளது. நாளொன்றுக்கு, 716 ரூபாய் என்ற அடிப்படையில், நான்கு மாதங்களுக்கு மட்டும் பணி புரியும் வகையில் தினக்கூலி பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத தொடர்பான அறிவிப்பை சி.எம்.டி.ஏ., நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !