இழப்பீடு தராத கட்டுமான நிறுவனம் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க உத்தரவு
சென்னை, சென்னை அண்ணா நகர், 100 அடி சாலையில், 'ஓசோன் புராஜக்ட்ஸ்' நிறுவனம் சார்பில், 'மெட்ரோசோன் பினாகிள் டவர்' என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. இதில், இரண்டு வீடுகள் வாங்க, ஆர்.தியாகராஜன், டி.ஜெயஸ்ரீ ஆகியோர் ஒப்பந்தம் செய்தனர். இதற்காக தொகையை செலுத்திய நிலையில், குறிப்பிட்ட காலத்தில் கட்டுமான பணிகள் முடிக்கப்படவில்லை. இதனால், ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில் இவர்களுக்கு வீடு கிடைக்கவில்லை. இதுகுறித்து, தியாகராஜன், ஜெயஸ்ரீ ஆகியோர் ரியல் எஸ்டேட் ஆணையத்தில், 2022ல் முறையிட்டனர். இதை விசாரித்த ஆணையம், இவர்கள் செலுத்திய தொகையை திருப்பி அளிக்கவும், இழப்பீடாக அதற்கான வட்டியை அளிக்கவும், 2023ல் உத்தரவிட்டது. ஆனால், கட்டுமான நிறுவனம், இந்த உத்தரவை செயல்படுத்தாமல் உள்ளது. இதுகுறித்து தியாகராஜன், ஜெயஸ்ரீ ஆகியோர் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் மீண்டும் முறையிட்டனர். இந்த மனுவை, விசாரித்த, ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் ஷிவ்தாஸ் மீனா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு: கட்டுமான நிறுவனம் ஒப்பந்தப்படி குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்காததும், அதற்கான இழப்பீட்டை மனுதாரருக்கு தராமல் இருப்பதும் உறுதியாகிறது. எனவே, இதில் சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து, வருவாய் மீட்பு சட்டப்படி, சென்னை மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.***