உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒரே இடத்தில் பெஞ்ச் தேய்த்த அதிகாரிகளுக்கு... கண்டிப்பு மண்டல அலுவலர்கள் மீதும் கமிஷனர் அதிருப்தி

ஒரே இடத்தில் பெஞ்ச் தேய்த்த அதிகாரிகளுக்கு... கண்டிப்பு மண்டல அலுவலர்கள் மீதும் கமிஷனர் அதிருப்தி

சென்னை மாநகராட்சியில் நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டும், அதை மண்டல அதிகாரிகள் செயல்படுத்தாமல், அதே இடத்தில் பணியில் தொடர வைத்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இதனால், 'இடமாற்றம் செய்யப்பட்டோர் பணியேற்பு அறிக்கையை உடனே அனுப்ப வேண்டும். இடமாற்ற உத்தரவை செயல்படுத்தாத மண்டல அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் எச்சரித்துள்ளார்.சென்னை மாநகராட்சிக்கென தனி சிறப்பு அதிகாரம் இருந்தபோது, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து அல்லாத மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சிக்குள் பணியிட மாறுதல் பெற்று வந்தனர். ஆனாலும், ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல், அதிகாரிகள் பணியாற்றக் கூடாது என்ற விதி உள்ளது.ஆனால், பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் உள்ளிட்டோர் பற்றாக்குறை காரணமாக, 10 ஆண்டுகளாக, ஒரே மண்டலத்தில் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.இவர்கள், வழக்கமான இடமாற்ற நடைமுறைப்படி, அவ்வப்போது பணியிட மாறுதலை, அதே மண்டலத்தில் பெற்று, சில மாதங்களுக்கு பின், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் துணையுடன், பழைய இடத்திலேயே பணியை தொடர்கின்றனர்.இந்நிலை, மாநகராட்சி ரிப்பன் மாளிகை, வட்டார துணை கமிஷனர் அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களிலும் தொடர்கிறது.இவற்றிற்கு தீர்வு காணும் வகையில், வருவாய், பொறியியல், சுகாதாரம், கல்வி, மத்திய கணக்கு குழுமம் உள்ளிட்ட பிரிவுகளில் உதவியாளர்களாக பணியாற்றிய, 28 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.மேலும், 20 கால்நடை ஒப்பந்த டாக்டர்கள் மற்றும் நிரந்தர டாக்டர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்த அனைத்து இடமாறுதலுக்கும், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், இரு மாதங்களுக்கு முன் கையெழுத்திட்டார்.இவ்வாறு பணியிட மாறுதல் பெற்றவர்கள், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் அலுவலர்களின் உதவியுடன், பழைய இடத்திலே பதவியை தக்க வைத்துள்ளனர். அதன்படி, அந்தந்த மண்டல அலுவலர்கள், தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளையும், பணியாளர்களையும் தக்க வைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இவை, மாநகராட்சி கமிஷனரின் அதிகாரத்தை மீறிய செயல். ஆனாலும், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, பணியிட மாற்றம் செய்யப்பட்டோரை அதே மண்டலத்தில் தக்க வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது போன்ற செயல்களில் ஈடுபட்ட சில அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், ஏற்கனவே வெளியிட்ட பணியிட மாற்றத்தில், சில நிபந்தனைகள் விதித்து, அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாநகராட்சி அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை, எக்காரணம் கொண்டும், அதே பிரிவிலோ, அதே மண்டலத்திலோ பதவியை தக்க வைக்கும் கோரிக்கை ஏற்க இயலாது. இதுகுறித்து, மாநகராட்சி தலைமை அலுவலகத்திற்கு குறிப்பு அனுப்புவதை, சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.பணியிட மாற்ற உத்தரவை செயல்படுத்த தவறும் அதிகாரிகள் மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். பணியிட மாறுதல் செய்யப்படுவோரின் பணியேற்பு அறிக்கையை, உடனடியாக மாநகராட்சி பொதுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திடீரென சுற்றறிக்கை ஏன்?

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 2023ம் ஆண்டு வரை மட்டுமே, மாநகராட்சி எல்லைக்குள் பணியிட மாறுதல் பெறும் வசதி இருந்தது. தற்போது, மாநிலத்தில் எந்தவொரு மாநகராட்சி, நகராட்சிக்கும் பணியிட மாற்றம் செய்யலாம் என்ற விதி கொண்டு வரப்பட்டது.சென்னையில் நீண்ட காலம் ஒரே இடத்தில் பணியாற்றிய அதிகாரிகள், பல இடங்களில் பணம், கொடுக்கல், வாங்கலில் அதிகார மட்டத்திற்கு துாணாக இருந்து வருகின்றனர். அதுபோன்ற அதிகாரிகள் குறித்து எழுந்த புகார் அடிப்படையில், 20க்கும் மேற்பட்டோர் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். அவ்வாறு மாற்றப்பட்டோர் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, அதே மண்டலத்தில் தக்க வைக்கும் முயற்சியில், மண்டல அலுவலர்களும், அரசியல் கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை தவிர்ப்பதற்காகவே மாநகராட்சி கமிஷனர், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ