உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தனியார் சிற்றுந்துகளுக்கு பர்மிட் தருவதில்... முறைகேடு புகார் * * சேவை துவங்கும் முன்பே கிளம்பியது சர்ச்சை

தனியார் சிற்றுந்துகளுக்கு பர்மிட் தருவதில்... முறைகேடு புகார் * * சேவை துவங்கும் முன்பே கிளம்பியது சர்ச்சை

சென்னை, சென்னையில் பேருந்து வசதி இல்லாத பகுதிகளுக்கு, தனியார் சிற்றுந்துகள் இயக்க பர்மிட் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக, உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகார், சிற்றுந்து சேவை துவங்கும் முன்பே, சர்ச்சையை கிளப்பியுள்ளது.தமிழகத்தில் பொது போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தனியார் சிற்றுந்து திட்டத்திற்கு, தமிழக அரசு கடந்த ஜனவரியில் ஒப்புதல் அளித்தது.முதற்கட்டமாக, மாநிலம் முழுதும் 3,000க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க திட்டமிடப்பட்டு, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாயிலாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, வழித்தடங்களும் தேர்வு செய்யப்பட்டன.குறிப்பாக, பயணியர் தேவை அதிகமாக உள்ள சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களில், கூடுதல் வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டன.முதல் முறையாக சென்னையில் தனியார் சிற்றுந்து இயக்க அனுமதி அளித்ததால், இதற்கான 'பர்மிட்' பெற கடும் போட்டி நிலவியது.அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்து, அவற்றின் விண்ணப்பதாரர்களுக்கு, சிற்றுந்து இயக்குவதற்கான பர்மிட் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, தமிழகம் முழுதும் இதுவரை, 1,900 சிற்றுந்துகள் இயக்குவதற்கான பர்மிட் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் குன்றத்துார், பூந்தமல்லி, சோழிங்கநல்லுார், ஆலந்துார் உள்ளிட்ட பகுதிகளில் இயக்க, 300 சிற்றுந்துகளுக்கு பர்மிட் வழங்கப்பட்டுள்ளது.ஆனால், சிற்றுந்துகளுக்கு பர்மிட் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், போக்குவரத்து சார்ந்த தொழிலில் இருப்போருக்கு முறையாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, சிற்றுந்து உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:டீசல் விலை, உதிரி பொருட்கள் விலை உயர்வால், நாங்கள் பெரும் நஷ்டத்தில் சிற்றுந்துகளை இயக்கி வருகிறோம்.புதிய விதிமுறையில், கூடுதல் கி.மீட்டருக்கு அனுமதி மற்றும் கட்டண மாற்றமும் இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், கி.மீ., துாரம் மட்டுமே மாற்றம் செய்தனர்.ஒரு சிற்றுந்து இயக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சமாக, 35 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டியுள்ளது. தினமும் செலவு போக, 5,000 ரூபாய் வருவாய் கிடைத்தால் மட்டுமே, ஓரளவுக்கு சமாளிக்க முடியும்.தவிர, சிற்றுந்துகள் இயக்குவதற்கான புதிய வழித்தடங்கள் சரியாக தேர்வு செய்யப்படவில்லை. குறிப்பாக, மினி பஸ் வழித்தடங்களில் உள்ள முக்கிய பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்காமல் உள்ளன. பர்மிட் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. போக்குவரத்து அதிகாரிகள், ஆளுங்கட்சி பிரமுகர்களின் குடும்பத்தைச் சேர்ந்தோரை குலுக்கலில் அதிகம் பங்கேற்க செய்து, பர்மிட் வழங்குகின்றனர். குறிப்பாக, மதுரை, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து அதிகம் பேரை, சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அழைத்து வந்து, குலுக்கலில் பங்கேற்க செய்தனர்.இந்த தொழிலில், 25 ஆண்டுகளாக காத்திருக்கும் எங்களை போன்ற சிற்றுந்து உரிமையாளர்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. புதிய சிற்றுந்துகள் வருகை, எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என நினைத்திருந்தோம். தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.தமிழக முதல்வர் இதில் தலையிட்டு, எங்களை போன்றவர்களுக்கு உரிய பர்மிட் மற்றும் வழித்தடங்களை ஒதுக்கி தர, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த திட்டத்தை ஆக்கப்பூர்வமாக எடுத்து செல்லாவிட்டால், வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரிகள் மறுப்பு

இதுகுறித்து, தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தனியார் சிற்றுந்து இயக்குவதற்கான புதிய பர்மிட் வழங்குவதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அரசு விதிமுறைகளை பின்பற்றியே வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டன. மேலும், குலுக்கல் முறையில் தேர்வு செய்து, பர்மிட் வழங்கப்பட்டுள்ளது' என்றனர்.

பழைய முறை தொடருமா?

தமிழகத்தில், 1998ம் ஆண்டில் சிற்றுந்துகளுக்கு புதிய பர்மிட் வழங்கும்போது, சிற்றுந்து ஆப்பரேட்டர்கள் இயக்க உள்ள வழித்தடத்தை ஆய்வு செய்து, பயணியர் தேவை, செல்லும் வழித்தடம் உள்ளிட்ட விபரங்களை தேர்வு செய்து, விருப்ப மனு அளிப்பர். அந்த வழித்தடத்தில், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்த பின், பர்மிட் வழங்குவர். அதனால்தான் சிற்றுந்து திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டது. இந்த நடைமுறை இப்போது பின்பற்றுவதில்லை. வழித்தடம் தேர்வில் குளறுபடியும், உரியவர்களுக்கு பர்மிட் வழங்குவதில் முறைகேடும் நடப்பதால், புதிய சிற்றுந்து திட்டம் வெற்றிகரமாக மாறுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என, மினி பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !