நடத்துநர் - பயணி குஸ்தி ராஜகீழ்ப்பாக்கத்தில் சலசலப்பு
சேலையூர், ஓடும் பேருந்தில் நடத்துநர் - பயணி இடையே ஏற்பட்ட மோதல் சலசலப்பை ஏற்படுத்தியது. தாம்பரம் மேற்கு பகுதியில் இருந்து செம்மஞ்சேரிக்கு இயக்கப்படும் தடம் எண்: 99சி பேருந்து, நேற்று காலை செம்மஞ்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை சதீஷ், 42, என்பவர் ஓட்டினார். நடத்துநராக திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார், 35, என்பவர் பணியில் இருந்தார். பேருந்தில் தாம்பரத்தில் இருந்து மீனம்பாக்கத்தைச் சேர்ந்த கோவிந்தன், 45, என்பவர் ஏறினார். ராஜகீழ்ப்பாக்கத்திற்கு டிக்கெட் வாங்கினார். ராஜகீழ்ப்பாக்கம் சென்றதும், 'ராஜகீழ்ப்பாக்கம் யாராவது இருக்கிறீங்களா' என, நடத்துநர் கேட்டதாக கூறப்படுகிறது. யாரும் பதில் அளிக்காததால், பேருந்து நிற்காமல் சென்றுள்ளது. அப்போது, படிக்கட்டில் நின்றிருந்த கோவிந்தன், 'ஏன் பேருந்தை நிறுத்தவில்லை?' எனக்கேட்டு, நடத்துனரை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பயணியர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.