உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எரிவாயு குழாய் பதிப்பு பணிகள் கிடப்பில் போட்டதால் நெரிசல்

எரிவாயு குழாய் பதிப்பு பணிகள் கிடப்பில் போட்டதால் நெரிசல்

சோழிங்கநல்லுார்:நிர்வாக குளறுபடியால், இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் பணியை பாதியில் நிறுத்தியதுடன், பள்ளம் தோண்டும் இயந்திரங்களின் இடையூறால், சோழிங்கநல்லுாரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஸ்ரீபெரும்புதுாரில் திரவ நிலை எரிவாயு நிலையம் உள்ளது. அதை, சி.என்.ஜி., என்ற இயற்கை எரிவாயுவாக மாற்றி, லாரிகள் மூலம், ஓ.எம்.ஆர்., செம்மஞ்சேரியில் சி.என்.ஜி., நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து, செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுார், காரப்பாக்கம், துரைப்பாக்கம் பகுதிகளில் குழாய் வழியாக இயற்கை எரிவாயு வழங்கப்பட உள்ளது. இதற்காக, செம்மஞ்சேரியில் உட்புற சாலைகளில் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. பிரதான குழாய் துரைப்பாக்கம் வரை, ஓ.எம்.ஆர்., அணுகு சாலையில் பதிக்கப்படுகிறது. ஒப்பந்த நிறுவனத்தில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடியால், போக்குவரத்து நெரிசல் உள்ள சோழிங்கநல்லுார் பகுதியில் குழாய் பதிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. சாலை மைய பகுதி மற்றும் எதிர் திசையில் உள்ள அணுகு சாலை முழுதும், மெட்ரோ ரயில் திட்டப்பணிக்காக தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. இதனால், ஆறுவழி சாலையான ஓ.எம்.ஆர்., இருவழியாக  மாறி உள்ளது. அதிலும் மெட்ரோ ரயில் பணி மற்றும் எரிவாயு குழாய் பதிக்கும் இடத்தில், ஒருவழியாக உள்ளது. இதனால், 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் ஒரு கி.மீ., வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, ஓ.எம்.ஆரில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, நிர்வாக குளறுபடிகளை நீக்கி, எரிவாயு குழாய் பதிக்கும் பணியை வேகமாக முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ