பயனற்ற ஆலந்துார் சுரங்கப்பாதை மாற்றி யோசித்தால் நெரிசல் தீரும்
ஆலந்துார், ஆலந்துாரில் ஜி.எஸ்.டி., சாலையை பொதுமக்கள் கடக்க வசதியாக, 2005ல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டது; 13 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தது.ஆலந்துாரில் மெட்ரோ ரயில் சேவை துவங்கிய பின், ஜி.எஸ்.டி., சாலையின் எதிர்புறம் உள்ள ஆசர்கானா பேருந்து நிலையத்திற்கு, பயணியர் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக நடை மேம்பாலம் கட்டப்பட்டது.இதன் காரணமாக, மேற்கண்ட சுரங்க நடைபாதை பயன்பாடின்றி போனது. இதை, பரங்கிமலையில் இருந்து ஜி.எஸ்.டி., சாலையை எளிதில் கடக்கும் வகையில், இலகுரக வாகனங்கள் செல்லும் வழித்தடமாக மாற்ற வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.சமூக நல ஆர்வலர்கள் கூறியதாவது:மடிப்பாக்கம், வாணுவம்பேட்டை, ஆதம்பாக்கம், பரங்கிமலை, ஆலந்துார் ஆகிய பகுதிகளில் இருந்து பூந்தமல்லி, கோயம்பேடு, பாரிமுனை வழித்தடங்களுக்கு செல்ல, ஜி.எஸ்.டி., சாலையை கடக்க வேண்டும்.இதற்காக, ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து பணிமனை சென்று பயணிக்க வேண்டும் அல்லது தலைமை அஞ்சலகம் எதிரே, 'யு --- டர்ன்' செய்து, 1 கி.மீ., துாரம் பயணிக்க வேண்டும்.இதனால், வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. ஜி.எஸ்.டி., சாலையில் யு - டர்ன்' செய்வதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.எனவே, தாம்பரத்தில் ரயில்வே சுரங்கப்பாலத்தை போக்குவரத்திற்கேற்ப மாற்றம் செய்தது போல, ஆலந்துார் சுரங்க நடைபாதையை, இலகு ரக வாகனங்கள் செல்லும் ஒருவழிப்பாதையாக மாற்றினால், போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும். இதற்கு, நெடுஞ்சாலைத் துறை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.