உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.19.57 லட்சத்தை வட்டியுடன் தர கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவு

ரூ.19.57 லட்சத்தை வட்டியுடன் தர கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவு

சென்னை, 'ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வீட்டை ஒப்படைக்காத நிறுவனம், ஏற்கனவே வசூலித்த, 19.57 லட்சம் ரூபாயை வட்டியுடன் திருப்பித்தர வேண்டும்' என 'ரெரா' எனப்படும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.மேடவாக்கம் அடுத்த வேங்கைவாசல் கிராமத்தில், 'மான்யு வில்லாஸ்' என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை, 'அகலேஷ் இன்பிராஸ்டிரக்ட்சர்' என்ற நிறுவனம் செயல்படுத்தியது.இதில், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்க, ஹென்றி டேனியல் என்பவர் பணம் செலுத்தி, 2018ல் ஒப்பந்தம் செய்தார்.நிலத்துக்கான பத்திரப் பதிவு செய்த நாளில் இருந்து, ஒன்பது மாதங்களுக்குள் வீடு ஒப்படைக்கப்படும் என, கட்டுமான நிறுவனம் உறுதி அளித்திருந்தது.ஆனால், சம்பந்தப்பட்ட இடத்தில் கட்டுமான பணிகள் எதுவும் நடக்காத நிலையில், அது குறித்து ஹென்றி டேனியல், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறையிட்டார்.இந்த வழக்கை விசாரித்த, ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் ஷிவ்தாஸ் மீனா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டுமான நிறுவனம் பணிகளை முடிக்கவில்லை. இதில் மனுதாரர் செலுத்தியதாக கூறப்படும் தொகையில், 19.57 லட்சம் ரூபாய்க்கு ஆதாரங்கள் தாக்கலாகி உள்ளன. ரியல் எஸ்டேட் சட்ட விதிகளின்படி, குறிப்பிட்ட காலத்தில் வீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர், செலுத்திய தொகையை திரும்ப பெற வழி உள்ளது. இதன்படி, மனுதாரர் செலுத்திய, 19.57 லட்சம் ரூபாயை, வட்டியுடன் கட்டுமான நிறுவனம் திருப்பித்தர வேண்டும். இந்த உத்தரவை, 30 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ