சென்னை: பயணத்தின்போது டிக்கெட் வைத்திருந்தும், அது ரத்தாகிவிட்டது என கூறி, அபராதத்துடன் டிக்கெட்டுக்கு கட்டணம் வசூலித்த ரயில்வே நிர்வாகம், பாதிக்கப்பட்ட பயணியருக்கு, 20,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த செல்லப்பன் உள்ளிட்ட மூவர், சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: கடந்தாண்டு டிச., 20ல், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில், சென்னை எழும்பூரில் இருந்து தேவகோட்டை வரை செல்ல, டிக்கெட் முன்பதிவு செய்திருந்தோம். பராமரிப்பு பணி காரணமாக, ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது. எழும்பூர், தாம்பரம் இடையேயான கட்டணம் திரும்ப வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஐ.ஆர்.சி.டி.சி., செயலி வாயிலாக, ரத்து செய்யப்பட்ட பகுதிகளுக்கான கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான நடைமுறையை மேற்கொண்டோம். ஆனால், ரயில் பயணத்தின் போது, எங்களின் டிக்கெட் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக, டிக்கெட் பரிசோதகர் கூறினார். அத ற்கு, நாங்கள் டிக்கெட்டை ரத்து செய்யவில்லை என, கூறினோம். அதற்கு அவர், டிக்கெட் பரிசோதனை இயந்திரத்தில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது என காண்பிப்பதாகக் கூறி, பயணத்துக்கான முழு கட்டணம் மற்றும் அபராதம் என, 1,800 ரூபாய் வசூலித்தா ர். இது சேவை குறைபாடு . எனவே, உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த அமர்வில், ரயில்வே நிர்வாகம் தாக்கல் செய்த பதில் மனுவில், 'டிக்கெட் பரிசோதனை இயந்திரத் தில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டுள்ளது என காண்பித்ததால், மனுதாரர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்கிறார்கள் என்ற அடிப்படையில், முழு கட்டணம் மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை சேவை குறைபாடு என கூற முடியாது' என கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த ஆணையம், 'டிக்கெட் பரிசோதனை இயந்திரத்தின் கோளாறு காரணமாக, மனுதாரர்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்துள்ளார்கள் என, அவர்களிடம் முழு கட்டணம் மற்றும் அபராதம் விதித்ததை ஏற்க முடியாது. பயணத்தின் போது, மனுதாரர்களிடம் டிக்கெட் இருந்துள்ளது. இயந்திரத்தில் ஏற் பட்ட கோளாறுக்காக, மனுதாரர்களிடம் முழு பயண கட்டணம் மற்றும் அபராதம் வசூலித்தது சேவை குறைபாடு. எனவே, மனுதாரர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்காக, மொத்தம் 15,000 ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவுக்காக 5,000 ரூபாயும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.