உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மண்டல கூட்டத்தில் வெடித்த மின் வாரிய பிரச்னைகள் கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு

மண்டல கூட்டத்தில் வெடித்த மின் வாரிய பிரச்னைகள் கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு

திருவொற்றியூர்:வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், திருவொற்றியூரில் பல இடங்களில் சேதமான மின் இணைப்பு பெட்டிகளை சீரமைக்காதது, மின் இணைப்பு பணிக்காக சாலையை தோண்டிய தனிநபர் மீது நடவடிக்கை எடுக்காதது உள்ளிட்ட, பல்வேறு பிரச்னைகளை கவுன்சிலர்கள் முன்வைத்து, அதிகாரிகள் மீது சரமாரியாக குற்றஞ்சாட்டினர். திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம் தி.மு.க., மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடந்தது. இதில், பொறுப்பு உதவி கமிஷனர் பாண்டியன், பொறுப்பு செயற்பொறியாளர் பாபு, உதவி வருவாய் அலுவலர் அர்ஜுனன் மற்றும் பிற துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், 76 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் வார்டு பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசியதாவது: கவி.கணேசன், தி.மு.க., 12வது வார்டு: வார்டு முழுதும் மழைநீர் வடிகால்வாய் கழிவுநீர் கால்வாயாக மாறி வருகிறது. இதனால், தொற்று நோய், மர்ம காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழைநீர் வடிகால்வாயை துார்வார வேண்டும். அதுமட்டுமல்லாமல், 13வது வார்டில் இருந்து கழிவு நீருடன் வெளியேறும் மழைநீர், 12வது வார்டு வழியாக தான் வெளியேற வேண்டும். ஆனால், மேற்கண்ட வடிகால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், நிரம்பி வழிந்து குமரன் நகர் பகுதி கடுமையாக பாதிக்கப்படுகிறது. கோமதி, சுயேச்சை 2வது வார்டு: சவுத்லாக் சாலை பகுதியில், நான்கு நாட்களுக்கு முன் பெய்த மழைக்கு முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியது. இதனால், இரவில் மக்கள் சிரமமடைந்தனர். அந்த சாலை உட்பட, விடுப்பட்ட சாலைகளை சீரமைத்து தர வேண்டும். நேரு நகர் மைதானத்தில், மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால் அமைக்க வேண்டும். பகிங்ஹாம் கால்வாய் ஒட்டி, பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. அவை மீன் வலைகளை அறுப்பதால் பிரச்னை உள்ளது. ஜெயராமன், மார்க்., கம்யூ., 4வது வார்டு: வார்டில், 12 சாலைகள் 'மில்லிங்' செய்து ஒரு மாதமாகியும், புதிய சாலை போடவில்லை. கிரிஜா நகர் - முல்லை தெருவில், புதிதாக போட்ட சாலையை தனிநபர் தோண்டி, மின்வாரிய பணிகள் மேற்கொள்கிறார். இது குறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் எங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்கின்றனர். எப்படி தோண்டினார்கள் என்பதும் இதுவரை புரியவில்லை. மல்லிகை தெருவில், பழுது பார்ப்பு பணிக்காக தோண்டிய பள்ளத்தை மூடினர். ஆனால் முறையாக சீரமைக்கவில்லை. இது குறித்து கேட்டால், 'மழைநீர் வடிகால் பணியின் போது, மின் வடங்களை அறுத்து விடுகின்றனர். அவர்களை ஏன் கேட்பதில்லை' என, என்னை மின்வாரிய அதிகாரி கேட்கிறார். இது எந்தவிதத்தில் நியாயம். தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் பேசி, மின் பெட்டிகள் சேதமானதிற்கு 1.05 லட்சம் ரூபாய் காசோலை பெற்று தந்துள்ளேன். மின் கேபிள்கள் வாங்கி தந்திருக்கிறேன். என்னை எப்படி கேள்வி கேட்கலாம். பஜனை கோவில் தெருவில், மின்பெட்டி பழுதாகி சாய்ந்து விட்டது. அதையும் சீரமைக்கவில்லை. புலம்பிய கவுன்சிலர் தமிழரசன், தி.மு.க., 3வது வார்டு: இதுவரை, 20 கூட்டங்களுக்கு மேலாக கேட்டு விட்டேன். பர்மா நகரில் விடுப்பட்ட, 4 - 5 தெருக்களுக்கு பாதாள சாக்கடை வருமா; வராதா என்பதை அதிகாரிகள் தெளிவுப்படுத்த வேண்டும். மக்களிடம் பதில் சொல்ல முடியவில்லை. மின்பெட்டிகள் எலும்பு கூடாக மாறியுள்ளன. உயிரிழப்பு அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் மட்டுமே, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று தெரியவில்லை. மின் பழுது ஏற்பட்டால், பொதுமக்களிடம் மின் கம்பி வாங்கி தர சொல்வதாகவும் புகார் உள்ளது. ராஜகுமாரி, தி.மு.க., 8வது வார்டு: வார்டு முழுதும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தால், காலையில் ஊழியர்கள் வருகின்றனர். அப்போது, நாய் வீடுகளில் பதுங்கி விடுகின்றன. 4:00 மணிக்கு மேல் தான் வெளியே சுற்றித்திரிகின்றன. எனவே, மாலையில் நாய் பிடிக்கும் பணி மேற்கொள்ள வேண்டும். சாமுவேல் திரவியம், காங்., 6வது வார்டு: கலைஞர் நகர், முதல் தெரு விரிவாக்க பகுதியில், இருவர் வடிகாலை ஆக்கிரமித்துள்ளனர். அந்த கட்டடங்களை அகற்றி தர வேண்டும். மழைநீர் வடிகாலில் தண்ணீர் இறங்கும் தொட்டிகள் சில இடங்களில் கிடையாது. அதை அமைத்து தர வேண்டும். சத்தியமூர்த்தி நகர் தெரு விளக்கு கம்பங்களில், விளக்குகள் கிடையாது. இதனால் அப்பகுதி கும்மிருட்டாக மாறி விபத்து அபாயம் உள்ளது. இவ்வாறு அவர்கள் பேசினர். இதையடுத்து மண்டல குழுத் தலைவர் தி.மு.தனியரசு பேசுகையில், 'வார்டு உதவி பொறியாளர்கள், கவுன்சிலர்களுடன் கலந்தாலோசித்து, தண்ணீர் தேங்கும் இடங்கள், மழைநீர் வடிகால் குறித்து, கணக்கெடுத்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். அதேபோல, மின் வாரியம், மின்பெட்டிகளை மாற்றித்தர வேண்டும்' என, அதிகாரிகளிடம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !