உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் வார இறுதியில் டில்லி செல்கிறது

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் வார இறுதியில் டில்லி செல்கிறது

சென்னை: 'ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்ட, நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில், இந்த வார இறுதியில் டில்லிக்கு அனுப்பி வைக்கப்படும்' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., ஆலையில், 175 வகைகளில், 600 வடிவமைப்புகளில், ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணி, கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது, இந்த ரயில் தயாராக உள்ளது. பல்வேறு கட்ட சோதனைக்கு உட்படுத்த, டில்லிக்கு அனுப்பப்பட உள்ளது. இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: நாட்டிலேயே முதல் முறையாக, 118 கோடி ரூபாயில், ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், நீராவியை மட்டுமே வெளியிடுவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. மின்சாரத்தில் இயக்கும் ரயிலை விட, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தது. முக்கிய நகரங்களில் இருந்து, குறுகிய துாரத்துக்கு மட்டுமே, தற்போது இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 50 முதல் 80 கி.மீ., துாரம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயிலில் 10 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 84 பேர் பயணம் செய்யலாம். ரயில் இன்ஜின் 1,200 குதிரை திறன் கொண்டது, அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் செல்லும். இந்த ரயிலில் கழிப்பறை, 'சிசிடிவி' கேமரா, தானியங்கி கதவுகள் இருக்கும். இந்த ரயில் இந்த வாரம் இறுதிக்குள், வடக்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. ஹைட்ரஜன் ரயில் வேறொரு இன்ஜினில் இணைக்கப்பட்டு, டில்லி கொண்டு செல்லபடும். பிறகு, வாரியம் தேர்வு செய்யும் தடத்தில், பல்வேறு கட்ட சோதனை நடத்தப்படும். சோதனை இறுதி செய்த பின், ஹரியானா மாநிலம், சோனிபேட் - ஜிந்த் இடையே, முதல் ஹைட்ரஜன் ரயில் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !