கண்காட்சிகளின் போது கொடை, ஊட்டிக்கு கூடுதல் வாகனங்கள் செல்ல கோர்ட் அனுமதி
சென்னை:ஊட்டி மற்றும் கொடைக்கானலில், கோடை கண்காட்சிகள் நடத்தும் போது, கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி வழங்க, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோடை விடுமுறையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும், சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்தும், இ - -பாஸ் பெற்று செல்லும் முறையை கட்டாயமாக்கியும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது.அதாவது, ஊட்டிக்கு வார நாட்களில் 6,000; வார இறுதி நாட்களில் 8,000; கொடைக்கானலுக்கு வார நாட்களில் 4,000; வார இறுதி நாட்களில் 6a,000 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு பிளீடர் டி.சீனிவாசன் ஆஜராகி, ''ஊட்டிக்கு ஏப்ரல், 1 முதல், 21ம் தேதி வரை, வார நாட்களில் சராசரியாக 7,000 வாகனங்கள், வார இறுதி நாட்களில், 9,450 வாகனங்கள் வந்துள்ளன. கோடையில் அரசு சார்பில் பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளன. எனவே, கூடுதல் வாகனங்களுக்கு அனுமதிக்க வேண்டும்,'' எனக்கூறி, நீதிமன்ற உத்தரவின்படி, இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜரான, நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் சங்கீதா , ''கோடை காலத்தில், ஊட்டியில் மலர், பழம், ரோஜா கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளன. எனவே, கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,'' என்றார்.இதையடுத்து அரசின் அறிக்கையை பதிவு செய்த நீதிபதிகள், கோடை கால விழாக்களின் போது, கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்ற அவசியம் வந்தால், ஊட்டியில், 500 வாகனங்களுக்கு, மாவட்ட கலெக்டர் அனுமதி அளிக்கலாம். இதேபோல கொடைக்கானலுக்கு, கூடுதலாக, 300 வாகனங்களுக்கு, மாவட்ட கலெக்டர் அனுமதி அளிக்கலாம் என, உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.