உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கார் பார்க்கிங், திரையரங்கு மூடல் விவகாரம் தற்போதைய நிலையே நீடிக்க கோர்ட் உத்தரவு

கார் பார்க்கிங், திரையரங்கு மூடல் விவகாரம் தற்போதைய நிலையே நீடிக்க கோர்ட் உத்தரவு

சென்னை, சென்னை விமான நிலையத்தில், கார் நிறுத்தும் வளாக அமைந்துள்ள திரையரங்கை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க கோரி பி.வி.ஆர்., ஐநாக்ஸ் அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும் வரை, திரையரங்கை மூடுவது தொடர்பான விஷயத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.சென்னை விமான நிலையத்தில் உள்ள கார் நிறுத்தும் வளாகத்தை மேம்படுத்துவது தொடர்பாக, மீனம்பாக்கம் 'ரியாலிட்டி பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்துடன், இந்திய விமான நிலையங்கள் ஆணையம், 2018ல் ஒப்பந்தம் செய்தது.

ஓப்பந்தம்

கார் நிறுத்தும் வளாகம் உள்ள இடத்தில், திரையரங்கு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு, 'பி.வி.ஆர்., ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸ்' நிறுவனத்துடன் துணை ஒப்பந்தமும் செய்யப்பட்டது.திரையரங்கு அமைய உள்ளதை குறிப்பிட்டு, கார் நிறுத்த வளாக மேம்பாட்டு பணிகளுக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல், சென்னை மாநகர போலீஸ் கமிஷனரின் தடையில்லா சான்றுகள் பெற்று, கட்டுமானங்கள் முடித்து, 2023 பிப்ரவரி முதல், திரையரங்கு செயல்பாட்டுக்கு வந்தது.இந்த நிலையில், இந்திய விமான நிலையங்கள் ஆணைய சட்டப்படி, விமான நிலைய வளாகத்தில் திரையரங்குகளுக்கு அனுமதியில்லை எனக்கூறி, திரையரங்கை மூட முடிவு செய்துள்ளதாக, மீனம்பாக்கம் ரியாலிட்டி நிறுவனத்துக்கு, விமான நிலையங்கள் ஆணையம் கடிதம் அனுப்பியது.

வாதம்

மேலும், விமான நிலையத்தில், 4.5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ள கார்கள் நிறுத்தும் வளாகத்தை, தாங்களே நிர்வகிக்க இருப்பதாகக்கூறி, மீனம்பாக்கம் ரியாலிட்டி நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தத்தை, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ரத்து செய்தது.இதனால், விமான நிலைய வாகன நிறுத்தும் பகுதியில் உள்ள திரையரங்கு மூடப்படும் என்பதால், திரையரங்கை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பி.வி.ஆர்., ஐநாக்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பி.வி.ஆர்., ஐநாக்ஸ் தரப்பில், 'திரையரங்கம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கக் கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என வாதிடப்பட்டது.விமான நிலையங்கள் ஆணையத்தின் தரப்பில், 'சட்டப்படி விமான நிலைய வளாகத்தில் திரையரங்குகள் அமைக்க அனுமதியில்லை. பி.வி.ஆர்., ஐநாக்ஸ் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து, முடிவு தெரிவிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது.இதை பதிவு செய்த நீதிபதி, பி.வி.ஆர்., ஐநாக்ஸின் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் வரை, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ