கைக்கடிகார பழுதை கட்டணமின்றி சரிசெய்து தர நீதிமன்றம் உத்தரவு
சென்னை, 'வாடிக்கையாளரின் கைக்கடிகாரத்தை, கட்டணம் இன்றி ஒரு மாதத்திற்குள் பழுது பார்த்து வழங்காவிட்டால், கைக்கடிகாரத்தின் விலையை கொடுக்க வேண்டும்' என, அண்ணா நகரில் உள்ள பழுது பார்ப்பு நிறுவனத்துக்கு, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சுவாதி தாக்கல் செய்த மனு:பிரபல 'பாசில்' நிறுவன தயாரிப்பின் 50,000 ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரம் வாங்கினேன். இந்த கைக்கடிகாரம் பழுதானதால், கடந்தாண்டு மே 26ல் அண்ணாநகர் ரவுண்டானா பகுதியில் பி.ஓ.ஆர்.ஆர்., அண்ட் சன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற சேவை மையத்தில், பழுது பார்க்க கொடுத்தேன்.இதற்கான செலவு தொகை 2,700 ரூபாயை வழங்கிய நிலையில், ஒரு மாதம் கெடு கேட்டனர். ஆனால், குறிப்பிட்ட காலத்தில் கைக்கடிகாரத்தை பழுது பார்த்து வழங்காமல், தொடர்ந்து இழுத்தடித்தனர். எனவே, கைக்கடிகாரத்தை பழுது பார்த்து வழங்கவும், இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:மனுதாரரரின் கைக்கடிகாரத்தை, கைக்கடிகார தயாரிப்பு நிறுவனத்தின் சேவை மையம் பழுது பார்த்து வழங்காதது சேவை குறைபாடு. எனவே, எந்தவித கட்டணமும் இல்லாமல் மனுதாரரின் கைக்கடிகாரத்தை சேவை மையம், ஒரு மாதத்திற்குள் பழுது பார்த்து கொடுக்க வேண்டும்.இல்லாதபட்சத்தில் கைக்கடிகாரத்தின் மதிப்பான 50,000 ரூபாய் வழங்க வேண்டும். சேவை குறைபாடு, மன உளைச்சலுக்காக 10,000 ஆயிரம், வழக்கு செலவுக்காக 5,000 ஆயிரம் ரூபாய் மனுதாரருக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.