உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கிரைம் கார்னர் - டி.சி.,

 கிரைம் கார்னர் - டி.சி.,

தலைமறைவு கஞ்சா வியாபாரி கைது சாஸ்திரி நகர்: பெசன்ட் நகரை சேர்ந்தவர் தினேஷ், 22, கஞ்சா வியாபாரி. இவரது வழக்குகள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடக்கின்றன. ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அதனால், நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து, சாஸ்திரி நகர் போலீசார், தலைமறைவாக இருந்த தினேஷை, நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ரகளையில் ஈடுபட்ட மூவர் கைது ராயபுரம்: காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் கரண்குமார், 29, தருண்குமார், 21, ஆறுமுகம், 25. இதில், கரண்குமார் மீது கஞ்சா உட்பட, ஏழு வழக்குகளும், தருண்குமார் மீது மூன்று குற்ற வழக்குகளும் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் அவர்கள் சாலையில் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து, நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காசிமேடு போலீசார் வழக்கு பதிந்து, அவர்களை நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 'காஸ்' நிறுவனத்தில் மோசடி செய்தவர் கைது பெரம்பூர்: பெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ், 44. தி.மு.க.,வில் பெரம்பூர் தொகுதி கலை இலக்கிய பிரிவு மாவட்ட செயலராக உள்ளார். இவர், வீட்டருகே நடத்திவரும் ஆர்.ஜே., என்டர்பிரைசஸ் என்ற தனியார் காஸ் நிறுவனத்தில் லோடுமேனாக வேலையில் இருந்த மோகன்குமார், 32, என்பவரை, பணியில் இருந்து சமீபத்தில் நீக்கினார். அப்போது மோகன்குமார், அலுவலகத்தில் இருந்த 'பில்' புத்தகங்களை திருடி, போலியாக பில் தயாரித்து, ஹோட்டல் ஒன்றில் 1,500 ரூபாய் பெற்றுள்ளார். இதுகுறித்து செம்பியம் போலீசார் விசாரித்து மோகன்குமாரை நேற்று கைது செய்தனர். மொபைல் போனை திருடியவர் சிக்கினார் மதுரவாயல்: பட்டாபிராம், தண்டரை பகுதியை சேர்ந்தவர் விமல்ராஜ், 31. காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர், 21ம் தேதி, மதுரவாயல், ஏரிக்கரை அருகே அவரது 'டாடா ஏஸ்' லோடு வாகனத்தில் வைத்திருந்த மொபைல் போன் திருடப்பட்டது. புகாரின்படி விசாரித்த மதுரவாயல் போலீசார், மொபைல் போன் திருட்டில் ஈடுபட்ட, அமைந்தகரையை சேர்ந்த யுவராஜ், 26, என்பவரை நேற்று கைது செய்தனர். போன் பறிப்பு: மேலும் இருவர் சிக்கினர் வளசரவாக்கம்: காரம்பாக்கம், கந்தசாமி நகரை சேர்ந்தவர் விக்னேஷ், 20; தனியார் நிறுவன ஊழியர். கடந்த 5ம் தேதி வேலை முடிந்து அவரது நண்பருடன் நடந்து சென்றபோது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர், அவர்களை வழிமறித்து, மொபைல் போனை பறித்துத் தப்பினர். இவ்வழக்கில் ஏற்கனவே நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்த நபர்களை தேடி வந்தனர். அதன்படி, கொளத்துாரை சேர்ந்த கோவிந்தராஜ், 25, பாலாஜி, 23, ஆகிய இருவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். ஆட்டோ கண்ணாடியை உடைத்தவர் கைது வானகரம்: திருவேற்காடு தேரோடும் வீதியை சேர்ந்தவர் பாபு, 30. ஆட்டோ ஓட்டுநர். கடந்த 19ம் தேதி இரவு, தன் மனைவியை அழைத்து வர, வானகரம் சர்வீஸ் சாலையில் ஆட்டோவில் சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத நபர், ஆட்டோவை வழிமறித்து சவாரி செல்ல வேண்டும் என கூறினார். தன் மனைவியை அழைத்து வர இருப்பதால், சவாரி வர முடியாது என, பாபு கூறியுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில், அந்த நபர், ஆட்டோவின் முகப்பு கண்ணாடியை உருட்டு கட்டையால் உடைத்து விட்டு தப்பினார். புகாரின்படி விசாரித்த வானகரம் போலீசார், ஆட்டோ கண்ணாடியை உடைத்த, அடையாளம்பட்டு பகுதியை சேர்ந்த கார்த்திக், 30; என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை