கிரைம் கார்னர்: சென்னை
மூதாட்டியிடம் செயின் பறித்த பெண் சிக்கினார் ஆதம்பாக்கம்: ஆதம்பாக்கம், ஏ.எஸ்.கே., நகரைச் சேர்ந்தவர் ஹேமாவதி, 69. இவர், நேற்று முன்தினம் மாலை என்.ஜி.ஓ., காலனியில் நடந்து சென்றபோது, பெண் ஒருவர் அவரது 5 சவரன் செயினை பறித்து சென்றார். விசாரித்த ஆதம்பாக்கம் போலீசார், திருட்டில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த லலிதா, 56, என்பவரை நேற்று கைது செய்து, செயினை பறிமுதல் செய்தனர். உண்டியலை உடைத்து திருடியவர் சிக்கினார் அண்ணா நகர்: அண்ணா நகரில் சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 14ம் தேதி இரவு, முருகன் மண்டபம் அருகே வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்த 17 கிராம் தங்கச்சங்கிலி, 1 கிராம் தங்க மோதிரம் மற்றும் தங்க தாலி பொட்டு ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இது குறித்து விசாரித்த அண்ணா நகர் போலீசார், திருட்டில் ஈடுபட்ட பட்டாளம், தேவராஜ் தெருவைச் சேர்ந்த தனுஷ், 21, என்பவரை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். திருடிய தங்க தாலி பொட்டை விற்று செலவு செய்ததது போக, 17 கிராம் தங்க சங்கிலி மற்றும் 1 கிராம் தங்க மோதிரம் மீட்கப்பட்டது பெண்ணிடம் அத்துமீறியவருக்கு வலை ஓட்டேரி: புளியந்தோப்பு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது பெண், ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் வேலை முடித்து விட்டு, ஓட்டேரி செங்கைசிவம் பாலம் வழியாக ஸ்கூட்டரில் சென்றபோது, மர்மநபர் ஒருவர் அவரிடம் தவறாக நடக்க முயன்றார். அப்பெண் கூச்சலிடவே, அந்த நபர் பைக்கில் மாயமானார். இது குறித்து, சிங்கப்பெண் அதிரடி படையினர் விசாரித்து வருகின்றனர். வாலிபருக்கு கத்திக்குத்து: லாரி ஓட்டுநர் கைது ஆவடி: மோரை, திருமலை நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த், 25. இவர், நேற்று முன்தினம் இரவு வீராபுரம் பிரதான சாலையில் நின்றிருந்தபோது, அப்பகுதியில் சூப் கடை நடத்தும் பெண்ணிடம், மோரை, அண்ணா நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரேம்குமார், 40, மது போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை பிரசாந்த் தட்டிக்கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த பிரேம்குமார் நண்பர்களுடன் சேர்ந்து பிரசாந்தை தாக்கி கத்தியால் குத்தினார். காயமடைந்த பிரசாந்த், ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், பிரேம்குமாரை நேற்று கைது செய்தனர். ஓட்டுநரிடம் மொபைல் போன் திருடியவர் கைது மாதவரம்: ஏ.பி.எஸ்., மருத்துவ கல்லுாரியில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிபவர் வெங்கடேசன், 39. இவர், நேற்று அதிகாலை மாதவரம் ரவுண்டானா அருகே, ஹோட்டல் முன் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் வெங்கடேசனின் மொபைல்போனை திருடிச் சென்றார். விசாரித்த மாதவரம் போலீசார், திருட்டில் ஈடுபட்ட கொரட்டூரைச் சேர்ந்த தினகரன், 18, என்பவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். * வியாசர்பாடியைச் சேர்ந்தவர் மங்கிலால், 30, நேற்று முன்தினம் இரவு எம்.கே.பி.நகரில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த இருவர், அவரது மொபைல்போனை பறித்துச் சென்றனர். எம்.கே.பி.நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். அக்காவிற்காக நியாயம் கேட்ட தங்கைக்கு வெட்டு புளியந்தோப்பு: புளியந்தோப்பு, கே.பி.பார்க் குடியிருப்பைச் சேர்ந்தவர் மலர், 33. இவரது அக்கா லதா. அவரது கணவர் அஸ்வினுக்கும், ஓட்டேரியைச் சேர்ந்த அலமேலு என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு மலர், அலமேலு வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். அப்போது, அலமேலுவின் உறவினர் சங்கீதா, வீட்டில் இருந்த கத்தியால், மலரை வெட்டியுள்ளார். காயமடைந்த மலர், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓட்டேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். பெண் மீது கார் மோதியவரிடம் விசாரணை அரும்பாக்கம்: வேலப்பன்சாவடியைச் சேர்ந்தனர் வைஷாலி, 25. இவர், நேற்று முன்தினம் இரவு, அரும்பாக்கம் 100 அடி சாலையில் நடந்து சென்றபோது, கார் மோதியது. இதை தட்டிக்கேட்ட அவரிடம், காரை ஓட்டி வந்த நபர் மது போதையில் ஆபாசமாக பேசியுள்ளார். தகவலறிந்த போக்குவரத்து போலீசார், அந்த நபரை பிடித்து விசாரித்ததில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த ரூபன், 24, என்பதும், மது போதையில் கார் ஓட்டியதும் தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து, அரும்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.