உள்ளூர் செய்திகள்

கிரைம் கார்னர்

கடையில் புகுந்து திருடியவர் கைது படப்பை: படப்பை, அண்ணா நகரில் முந்திரி, பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகளை விற்பனை செய்யும் கடை உள்ளது. கடந்த 5ம் தேதி இரவு, இந்த கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், கல்லா பெட்டியில் இருந்த, 7,000 ரூபாயை திருடி சென்றனர். இதுகுறித்து, கடை உரிமையாளர் மதுமிதா, படப்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், கடையின் பூட்டை உடைத்து, பணத்தை திருடியது, நெற்குன்றத்தை சேர்ந்த சஞ்சய், 20, என்பது தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று சஞ்சய்யை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர். போதையில் ரகளை செய்தவர் கைது செம்பியம்: பெரம்பூர், முரசொலி மாறன் பாலம் அருகே, மது போதையில் சுற்றிதிரிந்த வாலிபர், பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி, அச்சுறுத்தி வருவதாக, காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் சென்றது. அதன்படி, செம்பியம் போலீசார் அங்கு சென்று, மது போதையில் ரகளை செய்த வாலிபரை, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த லோகநாதன், 23, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். மாமூல் கேட்ட மேலும் ஒருவர் கைது புளியந்தோப்பு: புளியந்தோப்பு, வ.உ.சி., நகரைச் சேர்ந்தவர் முகமது, 35. சிக்கன் கடையில் பணியாற்றும் இவரிடம், கடந்த 2ம் தேதி, அதேபகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 24, பிரேம்குமார், 21, ஆகியோர் பணம் கேட்டு பிரச்னை செய்துள்ளனர். இது குறித்து, முகமது கொடுத்த புகாரின்படி, பேசின்பாலம் போலீசார், மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பிரேம்குமாரை, பேசின்பாலம் போலீசார் நேற்று கைது செய்தனர். மயானத்தில் கஞ்சா விற்றவர் சிக்கினார் செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி, சுனாமி நகரை சேர்ந்தவர் மணிகண்டன், 24. இவர், செம்மஞ்சேரி மயானத்தில் வைத்து, இரவு நேரத்தில் கஞ்சா வியாபாரம் செய்து வந்தார். செம்மஞ்சேரி போலீசார், நேற்று இவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து, 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடைக்காரரிடம் வழிப்பறி: ரவுடி கைது அயனாவரம்: அயனாவரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சிராஜ், 44. இவர், அதே பகுதியில் சிக்கன் பகோடா கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அங்கு வந்த ஒருவர், சிராஜிடம் கத்தியை காட்டி மிரட்டி, 650 ரூபாய் பறித்து தப்பினார். புகாரின்படி, அயனாவரம் போலீசார் விசாரித்தனர். அதன்படி, சிராஜிடம் பணம் பறித்த, அயனாவரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த ரவுடி ஜான் ஸ்டோலன், 21, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். ரூ.5 லட்சம் கஞ்சா பறிமுதல் அம்பத்துார்: அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின்படி, அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, கையில் சூட்கேசுடன் திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த சூட்கேசில் கஞ்சா இருப்பது தெரிந்தது. இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், அவர்கள் எண்ணுாரைச் சேர்ந்த விக்னேஷ், 23, தயாளன், 19, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த, 5.10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 34 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி