பெண்ணின் பைக்கை திருடிய நபர் கைது அசோக் நகர்: மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ரோஜா, 46, இம்மாதம் 12ம் தேதி, அசோக் நகர் ஸ்ரீநாராயண மிஷன் பள்ளி அருகே, 'டியோ' ஸ்கூட்டரை நிறுத்தி, கடைக்கு சென்றார். அப்போது இவரது வாகனம் திருடுபோனது. அசோக் நகர் போலீசார் விசாரித்து, இருசக்கர வாகனத்தை திருடிய எழும்பூரைச் சேர்ந்த ஆகாஷ், 19, என்பவரை கைது செய்தனர். கடந்த 13ல், எழும்பூரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, மது போதையில் வாகனம் ஓட்டி ஆகாஷ் மாட்டியது குறிப்பிடத்தக்கது. பஸ்சில் திருட முயன்ற வாலிபர் கைது வானகரம்: விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி, 43; ஆட்டோ ஓட்டுநர். இம்மாதம் 15ம் தேதி, குடும்பத்துடன் சிதம்பரம் பேருந்தில் பயணம் செய்தார். அப்போது, பெரியசாமியின் பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நரேஷ் பிரதான், 20, திருட முயன்றார். அவரை மடக்கி பிடித்து வானகரம் போலீசாரிடம், பேருந்தில் இருந்த பயணியர் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். போதை பொருள் பதுக்கிய நான்கு பேர் கைது கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம், வாசு தெருவில் கண்காணித்த போதை பொருள் நுண்ணறிவு போலீசார், மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் வைத்திருந்த, ஆவடியைச் சேர்ந்த உஸ்மான், 23; பிரவீன், 21, ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். 17 கிராம் போதை பொருளை பறிமுதல் செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். அதேபோல், அமைந்தகரை, மேத்தா நகர் கூவம் கரையோரத்தில், மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பிரபாகரன், 32, கூலி தொழிலாளி செல்வா, 27, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 1.3 கிராம் போதை பொருள், இரு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். 33 கிலோ குட்கா பறிமுதல் ராயபுரம்: ராயபுரம், எஸ்.என்.செட்டி தெருவில் உள்ள திரையரங்கம் அருகே, போலீசார் நேற்று கண்காணித்தனர். அங்கு சந்தேகத்திற்கிடமாக சாக்கு பையுடன் நின்றிருந்த, காசிமேடைச் சேர்ந்த கமல், 42, என்பவரை பிடித்தனர். மூட்டையில் 33 கிலோ குட்கா இருந்தது. குட்காவை பறிமுதல் செய்த போலீசார், கமலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாத்திரைகளை விழுங்கிய இளம்பெண் அனுமதி கோயம்பேடு: தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், கோயம்பேடு சின்மயா நகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, வடபழனியில் உள்ள தனியார் மாலில் பணிபுரிகிறார். இரு தினங்களாக வேலைக்கு செல்லாமல் விடுதியில் இருந்துள்ளார். இதையறிந்த அவரது தாய், மொபைல் போனில் அழைத்து அவரை திட்டியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பெண், நேற்று முன்தினம் இரவு 15 உடல் வலி நிவாரண மாத்திரைகள் உட்கொண்டார். சக தோழிகள் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்; அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தையில் வெங்காயம் திருட்டு கோயம்பேடு: கோயம்பேடு காய்கறி சந்தையில், 2,000த்திற்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. சமீபமாக இரவு வேளைகளில் சந்தையில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சில தினங்களுக்கு முன் பெண்கள் கூட்டாக பழங்கள் திருடி செல்வதும், இளைஞர் ஒருவர் பழ பெட்டியை திருடி செல்வதும், சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வெங்காய கடை முன், அடுக்கி வைக்கப்பட்டிருந்த வெங்காய மூட்டைகளில் ஒன்றை மர்ம நபர் திருடி செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது. திருட்டு சம்பவங்களை தடுக்க, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.