சிறுவர்களிடம் அத்துமீறல் இருவருக்கு 'போக்சோ' நொளம்பூர்: திருமங்கலம் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், ஏழாம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் இருவரிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய், 24 மற்றும் பாரி அரசன், 23, ஆகியோரை, திருமங்கலம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். போன் பறிப்பு மூவர் கைது மதுரவாயல்: மதுரவாயல், லட்சுமி நகரில் உள்ள செல்லபிராணிகள் கடையில் பணிபுரிபவர் பார்த்திபன். நேற்று முன்தினம், பைக்கில் வந்த மூவர், இவரிடம் மொபைல் போனை பறிக்க முயன்றனர். அவர் சத்தம்போடவே தப்பினர். விசாரித்த போலீசார், போரூரைச் சேர்ந்த காமேஷ், 23, விக்னேஷ், 20, ஹரிபிரசாத், 24 ஆகியோரை நேற்று கைது செய்தனர். மருத்துவ மாணவி தற்கொலை மதுரவாயல்: மதுரவாயலில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி 17 வயது மருத்துவ மாணவி ஒருவர் படித்து வருகிறார். இவரது உறவினரின் 14 வயது மகளை, நவீன்குமார், 30 என்பவர், ஆசை வார்த்தை கூறி நேற்று முன்தினம் அழைத்துச் சென்றார். மதுரவாயல் போலீசார் இருவரையும் மீட்டனர். இந்த நிலையில், வீட்டில் இருந்த மருத்துவ மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுமி காதலனுடன் போனில் பேசுவதற்கு மருத்துவமாணவி உதவி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்தால் அடிப்பார்களோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர். பைக் திருட்டு சிறுவன் கைது தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை, இரட்டை குழி தெருவைச் சேர்ந்த கண்ணன், 56 என்பவரது டி.வி.எஸ்., பைக், நேற்று முன்தினம் திருட்டு போனது. விசாரித்த தண்டையார்பேட்டை போலீசார், 14 வயது சிறுவனை கைது செய்து, இரு பைக்குகள் பறிமுதல் செய்தனர். யு - டியூபர் மீது தாக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் கைது வடபழனி: வடபழனியில் உள்ள திரையரங்கில் 'ப்ரண்ட்ஸ்' பட சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. கடந்த 21ம் தேதி, முகலிவாக்கத்தைச் சேர்ந்த யு - டியூபர் கிரண் புரூஸ், 38, என்பவர் படத்தை பார்த்து வெளியே வந்தார். அப்போது நான்கு பேர், அவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். விஜய் குறித்து யு - டியூப் சேனலில் விமர்சனம் செய்ததால் தாக்கியதாக கூறப்படுகிறது. விசாரித்த வடபழனி போலீசார், ஆவடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான பாலகிருஷ்ணன், 25, தனுஷ், 21, அசோக், 24, பார்த்தசாரதி, 21 ஆகியோரை கைது செய்தனர். வீடு புகுந்து நகை திருட்டு எம்.கே.பி.நகர்: வியாசர்பாடி, காந்தி நகரை சேர்ந்தவர் ஜோசப் லுாயிஸ் மேரி, 76. இவரது வீட்டில், கடந்த 19ம் தேதி, 6.5 சவரன் நகை திருட்டுபோனது. எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர். ரோந்து போலீசாரிடம் சிக்கிய திருடன் ஆவடி: திருமுல்லைவாயில், அரிக்கம்பேடில் குடிநீர் சுத்திகரிக்கும் உபகரணங்கள் விற்பனை கடையின் பூட்டை உடைத்து, திருட முயன்ற கொரட்டூரைச் சேர்ந்த ரஞ்சித் குமார், 25 என்பவர், நேற்று அதிகாலை, ஆவடி டேங்க் பேக்டரி போலீசாரிடம் சிக்கினார்.