உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தெய்வீக அனுபவம் வழங்கிய தர்சனம் நாட்டிய நிகழ்ச்சி

 தெய்வீக அனுபவம் வழங்கிய தர்சனம் நாட்டிய நிகழ்ச்சி

சென்னை: 'அனுஷம் ஆர்ட்ஸ்' அகாடமி சார்பில், 'ஸ்ரீதேவி நிருத்யாலயா' நடனப்பள்ளியின், மூத்த கலைஞர்கள் பங்கேற்ற 'தர்சனம்' எனும் கருப்பொருளை மையப்படுத்தி, கருத்து சார் நாட்டிய நிகழ்ச்சி, தி.நகரில் உள்ள கர்நாடக சங்க அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியை, நடனப்பள்ளியின் மாணவியர், ஸ்மிருதிகா ஜனார்த்தனன், ஆஸ்ரிதா கிருஷ்ணன், மனோதா, மாயா சுவாமிநாதன், மேக்னா உன்னிகிருஷ்ணன் மற்றும் ரியா ஆதித்யா ஆகியோர் தொகுத்து வழங்கினர். இதில், ஸ்ரீதேவி நிருத்யாலயா நடனப்பள்ளியின் நிறுவனரும், நடன ஆசிரியருமான ஷீலா உன்னிகிருஷ்ணன், நடன அமைப்புடன் நட்டுவாங்கம் செய்தார். நம் பாரம்பரிய இசை மற்றும் நாட்டியத்தின் வாயிலாக, இறைமையை உணர முடியும் எனும் உண்மையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட, 'தர்சனம்' நடன நிகழ்ச்சி வெகு விமரிசையாக நிகழ்ந்தது. நிகழ்ச்சியின் துவக்கமாக, கோவில்களில் இறை உலா சமயத்தில் இசைக்கப்படும் 'மல்லாரி' வெகு பொருத்தமாக அமைந்தது . தொடர்ந்து, தடைகளை நீக்கி வெற்றிகளை அருளும் விநாயகப் பெரு மானை தொழுது, முத்துசாமி தீட்சிதர் இயற்றிய 'ஸ்ரீவல்லப நாய க ' கீர்த்தனை இடம் பெற்றது. நிகழ்ச்சியின் நடுநாயக நடனமாக, பாலமுரளிகிருஷ்ணாவின் 'ஓம்கார' வர்ணம், விறுவிறுப்பாக அமைந்து, ரசிகர்களை தெய்வீக அனுபவத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து, தில்லை சிதம்பர நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை வர்ணிக்கும், கோபாலகிருஷ்ண பாரதியின், அருமையான தமிழ் கீர்த்தனை இடம் பெற்றது. இதில், நாட்டிய சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கும், கர்ணங்களை பொருத்தி நடன அமைப்பு செய்யப்பட்டிருந்தது. நிறைவாக, காஞ்சியில் அருள்பாலிக்கும் காமாட்சி தேவியின் புகழ்பாடும் தில்லானா அமைந்து, ரசிகர்களை பரவசத்தில் திளைக்கச் செய்தது. வாய்ப்பாட்டு கலைஞர் மிதுன் மதுசூதனன், மிருதங்க கலைஞர் சிவபிரசாத், வயலின் கலைஞர் நந்தினி சாய்கிரிதர் மற்றும் புல்லாங்குழல் கலைஞர் சுஜித் ஆகியோரின் பங்கு பாராட்டுக்குரியதாய் அமைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி