மீட்கப்பட்ட 25 ஏக்கர் அரசு நிலத்தில் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல்
பூந்தமல்லி,பூந்தமல்லி ஒன்றியம், செம்பரம்பாக்கம் ஊராட்சி பழஞ்சூரில், சென்னை ---- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், அரசுக்கு சொந்தமான புஞ்சை அனாதீன நிலம், 25 ஏக்கர் உள்ளது.இதில், சர்வே எண்: 371/1ல், 5 ஏக்கர் நிலத்தை, செயின்ட் ஜான்ஸ் கல்வி அறக்கட்டளை, 1993 முதல் 2013ம் ஆண்டு வரை, 20 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்றது.குத்தகையாக பெற்ற நிலத்தில், 'இன்டர்நேஷனல் ரெசிடன்சி' பள்ளியை துவக்கியது. பல மாநிலங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், விடுதிகளில் தங்கி பயின்று வந்தனர்.இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, அப்பள்ளி மூடப்பட்டது. அதே நேரத்தில், குத்தகை தொகையான 23 கோடி ரூபாய் நிலுவை இருப்பதும், குத்தகை காலம் ஏற்கனவே முடிந்ததும், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவந்தது.இதையடுத்து, அங்கு வருவாய் துறையினர் ஆய்வுக்கு சென்றபோது, குத்தகை இடத்தின் அருகே உள்ள 20 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிமிரத்து, பள்ளி கட்டடங்கள், விடுதிகள் போன்றவை கட்டப்பட்டிருந்தன.தொடர்ந்து, கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் தனியார் கல்வி அறக்கட்டளையிடம் ஆக்கிரமிப்பில் இருந்த, 500 கோடி ரூபாய் மதிப்பிலான, 25 ஏக்கர் அரசு நிலத்தை வருவாய் துறையினர் மீட்டனர். பள்ளிக்கும் 'சீல்' வைக்கப்பட்டத்து.தனியார் கல்வி அறக்கட்டளையிடம் இருந்து மீட்கப்பட்ட அரசு நிலத்தில் உள்ள கட்டடங்கள் நல்ல முறையில் இருந்தன. இதனால், அவற்றை இடித்து அகற்றாமல் பயன்படுத்த அரசு அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி ஒன்பது மாதங்களாகும் நிலையில், இந்த இடத்தை பயன்படுத்தாததால் மீண்டும் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகும் ஆபத்து உள்ளது. எனவே, இந்த இடத்தில் அரசு கல்லுாரி அல்லது மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.