மூத்த குடிமக்களை பாதுகாக்க ஆணையம் அமைக்க கோரிக்கை
சென்னை: ''தமிழகத்தில், 1.25 கோடி பேர் மூத்த குடிமக்களாக உள்ளதால், அவர்கள் நலன் காக்க, கேரளாவை போல் தமிழகத்திலும் ஆணையம் அமைக்க வேண்டும்'' என, தமிழக மூத்த குடிமக்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ராமராவ் கூறினார். தமிழக மூத்த குடிமக்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் ஹெல்ப் ஏஜ் இந்தியா இணைந்து, மூத்த குடிமக்கள் ஆணையம் அமைப்பது தொடர்பாக, நேற்று அண்ணா நுாலகத்தில் கருத்தரங்கம் நடத்தின. இதில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த, 18 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இது குறித்து, தமிழக மூத்த குடிமக்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் ராமராவ் கூறியதாவது: தமிழகத்தில், 8 கோடி பேரில், 1.25 கோடி பேர் மூத்த குடிமக்கள். இது, வரும் 2031ல், 1.42 கோடியாக உயரும். பலர், குடும்பத்தில் இருந்து புறக்கணிப்பு, அவதுாறு, சுரண்டல் போன்றவற்றால், கடைசி காலங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். இவர்களின் நலன் காக்க, தமிழக அரசு, 'மூத்த குடிமக்களுக்கான மாநில கொள்கை - 2023' வெளியிட்டது. இந்த கொள்கையை செயலாக்கத்திற்கு கொண்டுவர ஆணையம் தேவை. கேரளாவில் இருப்பது போல், தமிழகத்தில் மூத்த குடிமக்கள் ஆணையம் அமைக்க வலியுறுத்தி, இந்த கருத்தரங்கில் விவாதித்து, தமிழக அரசுக்கு வரைவு அறிக்கை அனுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.