கே.கே. நகரில் ஆக்கிரமிப்பு இடித்து அகற்றம்
கே.கே., நகர்:கே.கே., நகரில் சாலையை ஆக்கிரமித்து, கட்டப்பட்டிருந்த சாய்த்தளங்கள் இடிக்கப்பட்டன.அசோக் நகர் மற்றும் கே.கே., நகர் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக கே.கே., நகர் காமராஜர் சாலை உள்ளது. இச்சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதைகளில், ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வந்தன.அத்துடன் சில கடைகள், நடைபாதை வரை கடைகளை விரிவாக்கம் செய்திருந்தன. மேலும் நடைபாதையில் ஜல்லிக்கற்கள் மற்றும் செங்கல் குவித்தும் விற்பனை செய்யப்பட்டன.இதுகுறித்து எழுந்த தொடர் புகாரையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த நவ. மாதம், பாப்காட் இயந்திரம் வாயிலாக, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இவற்றில் சில கடைகள் சாலை வரைக்கும் மிகப்பெரிய சாய்தளம் அமைத்திருந்தனர். இந்நிலையில் இந்த சாய் தளங்களை இடித்து அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.இதில், 10 அடி நீளம் 8 அடி அகலம் 4 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டிருந்த சாய்தளத்தை இடித்து அகற்றினர். அதேபோல் அண்ணா பிரதான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன.