அடுத்தவர் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடித்து அகற்றம்
ஆலந்துார்: அடுத்தவர் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளுடன் கூடிய வீட்டை, நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சியினர் இடித்து அகற்றினர். அடையாறை சேர்ந்தவர் ஆறுமுகம், 63. இவருக்கு சொந்தமான, 3,200 சதுர அடி நிலம், ஆலந்துார், மாதவபெருமாள் மேற்கு தெருவில் உள்ளது. அதை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அதில் வீரமுத்து, 55, என்பவர், கடைகளுடன் கூடிய வீட்டை அனுமதியின்றி கட்டி ஆக்கிரமித்துள்ளதாகவும், அந்த நிலத்தை மீட்டுத்தரும் படியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில், ஆறுமுகத்தின் நிலத்தை மீட்டு ஒப்படைக்கும்படி, கடந்த ஜன., மாதம் சென்னை மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை மாநகராட்சி சார்பில், வீரமுத்துவுக்கு முறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆக., மாதம், குடும்பத்துடன் தங்கியிருந்த வீரமுத்துவை வெளியேற்றிய மாநகராட்சி ஊழியர்கள், வீட்டிற்கு 'சீல்' வைத்தனர். இந்நிலையில், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் மணிமொழி தலைமையில், மாநகராட்சியினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன், கடைகளுடன் கூடிய வீட்டை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன், நேற்று இடித்து அகற்றினர்.