துறை வாரியாக மருந்தகம் அரசு மருத்துவமனை உறுதி
சென்னை,நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், இதயம், நரம்பியல் துறைகளில், கூடுதல் கவுன்டர்கள் அமைக்கப்பட்டு மருந்துகள் வினியோகிக்கப்படும் என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.சென்னை அண்ணாசாலையில் உள்ள, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், சில தினங்களுக்கு முன், நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்துகளை வாங்கியது குறித்து சர்ச்சை எழுந்தது.அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவையடுத்து, கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்பட்டன. ஆனாலும், வழக்கம்போல் இரண்டு கவுன்டர்களில் மட்டுமே மருந்து விநியோகம் நடந்ததால், நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்து வாங்கும் அவலம் தொடர்ந்தது.இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, மருந்தகங்களில் ஆய்வு செய்த, மருத்துவமனை இயக்குனர் மணி கூறியதாவது:மருத்துவமனையில் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் வருகைக்கு ஏற்ப, மருந்தகங்களில் கவுன்டர்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.ஒப்பந்த அடிப்படையில் கூடுதலாக மருந்தாளுனர்கள் நியமிக்கப்படுவர். இதன் வாயிலாக, இதயம், நரம்பியல் துறை பிரிவுகளில், அங்கேயே மருந்துகள் கொடுக்க புதிய கவுன்டர்கள் திறக்கப்படும்.வருங்காலங்களில் நோயாளிகள் பாதிக்காதவாறு, மருந்துகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.