உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வெள்ள தடுப்பு பணிக்கு ரூ.5,032 கோடி கொட்டியும் இழுபறி..தப்புமா தலைநகர்? தினமும் ஆய்வு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட துணை முதல்வர்

வெள்ள தடுப்பு பணிக்கு ரூ.5,032 கோடி கொட்டியும் இழுபறி..தப்புமா தலைநகர்? தினமும் ஆய்வு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட துணை முதல்வர்

சென்னை : சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிப்பதை தடுக்கும் வகையில், நிரந்தர தடுப்பு பணிகளுக்காக நான்கரை ஆண்டுகளில், 5,032 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டும், பணிகள் இழுபறியாகவே உள்ளன. வடகிழக்கு பருவமழை துவக்கிய ஓரிரு நாளிலேயே, பாதிப்பில் இருந்து சென்னை தப்புமா என்று, தினமும் ஆய்வு செய்யும் நிலைக்கு, துணை முதல்வர் உதயநிதி தள்ளப்பட்டுள்ளார். வடகிழக்கு பருவ மழைக்காலங்களில், சென்னை பெரும் வெள்ள பாதிப்பில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது. தென்சென்னை பகுதிகளில், குடியிருப்பு பகுதிகளில் புகும் வெள்ளத்தால், வீட்டு உபயோக பொருட்கள், கார்கள், டூ - வீலர்கள் உள்ளிட்டவை கடுமையாக சேதம் அடைந்து, மக்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சென்னையில் நிரந்தர வெள்ள தடுப்பு தொடர்பாக ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தர, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் அளித்த பரிந்துரைப்படி, நீர்வளத்துறை, சென்னை மாநகராட்சி வாயிலாக, நீர்வழித்தடங்களை துார் வாருதல், கரைகளை பலப்படுத்துதல், மழைநீர் கால்வாய் கட்டுமானம், ரெகுலேட்டர் அமைத்தல் உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்டி, 2,500 கோடி ரூபாயில், கொசஸ்தலையாறு ஒருங்கிணைந்த வடிகால்வாய் பணிகள், மழைநீர் உள்வாங்கும் கட்டமைப்புகளுக்கு, 1,500 கோடி ரூபாய்; பழைய வடிகால்வாய் இடிப்பு, புனரமைப்பு பணிகள், 1,032 கோடி ரூபாய் என, 5,032 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. ஆனால், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் சிறிய மழைநீர் கால்வாய்களை பெரிய கால்வாய்களுடன் இணைக்கும் பணிகள் முழுமை பெறவில்லை. டிராக்டரே கதி ஒக்கியம் மடுவு, பகிங்ஹகாம் கால்வாய், அரும்பாக்கம் - விருகம்பாக்கம் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் ஆகியவற்றை துார்வாரும் பணிகள் இழுபறியாக உள்ளன. கொசஸ்தலையாறு ஒருங்கிணைந்த வடிகால்வாய் பணிகள், 763 கி.மீ., நீளத்துக்கு, 2,500 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டு மூச்சுவாங்குகிறது. சென்னையில், 20 செ.மீ., மேல் மழை பெய்தாலும், அந்த நீரை உள்வாங்கும் வகையிலான கட்டமைப்புகள், 1,500 கோடி ரூபாயிலும், பழைய வடிகால்வாய் இடிப்பு, புனரமைப்பு பணிகள், 1,032 கோடி ரூபாயிலும் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக, மாநகராட்சி அதிகாரிகள் மார்தட்டுகின்றனர். ஆனால், வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், சென்னையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு இன்று, அதிக கன மழைக்கான ஆரஞ்ச் அலெர்ட், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், மழைநீர் கால்வாய்களை நம்பாமல், ஆங்காங்கே தண்ணீர் இறைக்கும் ராட்சத பம்ப் மோட்டார், பம்ப் மோட்டார் பொருத்தப்பட்ட டிராக்டர்களை ஆங்காங்கே, அதிகாரிகள் நிறுத்திவைத்து உள்ளனர். வெள்ள தடுப்பு பணிகள் முழுமை அடையவில்லை. அடுத்தாண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சென்னை வாசிகளின் அதிருப்தியை சம்பாதிப்பதை தவிர்க்க, அரசு மிகவும் முயற்சி மேற்கொள்கிறது. இதனால், வெள்ளதடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்யும் நிலைக்கு, துணை முதல்வர் உதயநிதி தள்ளப்பட்டுள்ளார். இரண்டு நாள் ஆய்வு தென்சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள, 62 ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர், ஓ.எம்.ஆர்., ஒக்கியம்மடு, பகிங்ஹாம் கால்வாய் வழியாக, முட்டுக்காடு கடலில் சேர்கிறது. ஒக்கியம்மடுவு அகலம் குறைவாக உள்ளதால், அதிக மழை பெய்யும்போது, தென்சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும். இதனால், ஒக்கியம்மடுவை அகலப்படுத்தி, கரையை பலப்படுத்த, 27 கோடி ரூபாயில் பணி நடகிறது. துணை முதல்வர் உதயநிதி, நேற்றுமுன்தினம், இப்பணிகளை பார்வையிட்டார். இதில், துார் வாருதல், கரை பலப்படுத்துதல், அகலத்தின் அளவு, கடந்த ஆண்டை விட வெள்ளம் அதிகமாக செல்லும் அளவு போன்ற விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கரையை அகலப்படுத்தி, பலப்படுத்தும் பணியை வேகப்படுத்த வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இரண்டாவது நாளாக நேற்று, பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரி, புழுதிவாக்கம் வீராங்கால் ஓடை உட்பட ஏழு முக்கிய இடங்களில், வெள்ளத் தடுப்பு மற்றும் நீர் வடிகால் பணிகளில் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பருவமழையால் பாதிப்பு ஏற்படாத வகையில், மேற்கொள்ள வேண்டிய அவசர மற்றும் நிரந்தர நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உதயநிதி உத்தரவை கேட்டு அதிகாரிகள் வழக்கம்போல், 'நீங்க சொன்னபடி செஞ்சிடுவோம்' என்று கூறி, தலையாட்டினர். சென்னையில் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டியுள்ள நிலையில், இரண்டு நாட்களாக பெய்த சாதாரண மழைக்கே பல பகுதிகளிலும் மழைநீர் தேங்கி குளம்போல் மாறிவிட்டது. வடகிழக்கு பருவ மழை தீவிரமானால் நிலைமை எப்படி இருக்குமோ என, மக்கள் அச்சத்தில் உள்ளனர். நம்புகிறோம் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாடகைக்கு மோட்டார்களும் வாங்கி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பெரிதாக பாதிப்பு வராது என்று நம்புகிறோம். - மாநகராட்சி அதிகாரிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Vijayakumar
அக் 22, 2025 20:39

4 1/2 வருஷமா மத்திய அரசுடன் சண்டை. ஒரு விஷயத்தில் கூட ஒத்து போக கூடாது என்பதில் உறுதியாக இருப்பது. வெத்து சபதம், வீண் பேச்சு, விளம்பர ஆட்சி. இளிச்ச வாயர்கள் நாம் தான்.


Krishnamurthy Venkatesan
அக் 22, 2025 12:29

மழை பெய்வதற்கு முன்னரே சென்னையின் தெருவில் சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கின்றன. கிரோம்பேட்டையில் ராதா நகர், voc தெரு near sai shankara catering, rp ரோடு.... இப்பொழுது சாக்கு சொல்ல இன்னும் வசதியாக போயிற்று. கோவிலம்பாக்கத்தில் revenue department approval உடன் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பொது பணி துறை encroachment என்று சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்களாம். இது என்ன கூத்து என்று மக்கள் புலம்புகிறார்கள்.


sankar
அக் 22, 2025 11:48

கொட்டியது எங்கே சார் ? அதை சொல்லவில்லையே


karthik
அக் 22, 2025 11:20

இது என்ன பிரமாதம்....நாங்க கூவத்துல இதுவரை எத்தனை ஆயிரம் கோடி கொட்டி இருக்கோம் தெரியுமா? ஆனால் இன்னும் அந்த முதலையை கண்டுபுடிக்க முடியவில்லை..


Vasan
அக் 22, 2025 11:15

சென்னையில் நேற்று பெய்த மிக கன மழைக்கு பின்னரும், பெரும் வெள்ள பாதிப்பு ஏதும் இல்லை. தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும், மழைநீர் வடிகால் கட்டமைப்பை மேம்பத்துவதில் உழைத்த தொழிலாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உளங்கனிந்த வாழ்த்துக்கள். சாலை ஓரத்தில் ஆங்காங்கே இருக்கும் தேங்கிய நீரை அப்புற படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும். மழை பெய்த சுவடே தெரியாது.


kjpkh
அக் 22, 2025 12:11

5000 கோடி செலவழித்து இருக்கிறீர்கள். சென்னை வாழ் மக்கள் மழையை பற்றிய கவலைப்பட வேண்டாம். நிம்மதியாக தூங்கலாம் என்றெல்லாம் சொன்னீர்கள். இப்போது தற்புகழ் பாடி கொண்டிருக்கிறீர்கள். இந்த சாதாரண மழைக்கு இத்தனை பேர்கள். என்னமோ சொல்லுங்கள்.


angbu ganesh
அக் 22, 2025 09:39

5032 கோடிக்கு ஒழுங்கா கணக்கா கட்ட சொல்லுங்க பாக்கலாம் இந்த 4.5 வருசத்துல என்னங்க கிழிச்சீங்க என்னமோ வருஷம் புல்லா படிச்சிட்டு கடைசி நேரத்துல தலையை சொரியரிங்க பிராடுங்க கூட்டம் திராவிடம் ஒழியனும்


angbu ganesh
அக் 22, 2025 09:37

இவனுங்க அகல படுத்தறேன்னு எங்களை பாட படுத்து எடுத்தானுங்க சரி நம்ம நல்லதுக்கானேன்னு விட்டோம் ஆனா இப்போ அத விட பாடா படறோம் ஆட்சிக்கு வர மட்டும் ஆசை பட்டா மட்டும் போதாது திறமை வேணும் உங்க திறமை எல்லாம் கொள்ள அடிக்கறதிலேயும் பழி வாங்கறது மட்டுமே காண்பிக்கறிங்க கடவுள் எல்லாம் இருக்கன்னு தெரியல இதுங்கள தூக்கமா


N S
அக் 22, 2025 09:17

ரூ.5,032 கோடி கொட்டியும் சரியில்லை. துணை முதல்வர் இங்கே தயார். காணுங்கள், மக்களை காக்கும் படை சூழ எப்படி கொட்டப்பட்டது என்று ஆய்வு நடக்கின்றது.


அருமை மாடல்
அக் 22, 2025 08:41

என்னது 5000 கோடி யா...இதுவரை 4000 கோடி அப்டின்னு தானே சொன்னாங்க...


Mani . V
அக் 22, 2025 05:35

முதலில் நாலாயிரம் கோடி. இப்பொழுது ரூ. 5032 கோடி. ஆக மொத்தம் 9032 கோடி ஆட்டை, சுவாகா. இதெல்லாம் துபாயில் முதலீடு செய்யப்பட்டு இருக்குமோ?


karthik
அக் 22, 2025 11:22

துபாய் வங்கி ஒன்று இந்தியாவில் இருக்கும் தனியார் வங்கியை வாங்க இருப்பதாக 2 நாள் முன்பு செய்தி வந்தது..


புதிய வீடியோ