உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.440 கோடி சொத்து இருக்கிறது ஜாமின் மனுவில் தேவநாதன் தகவல்

ரூ.440 கோடி சொத்து இருக்கிறது ஜாமின் மனுவில் தேவநாதன் தகவல்

சென்னை, நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ், இடைக்கால ஜாமின் கேட்டு தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது. சென்னை, மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த, 'தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட்' நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த, 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம், பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, நிதி நிறுவன இயக்குநர் தேவநாதன் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், ஜாமின் கோரி மூன்றாவது முறையாக தேவநாதன் யாதவ், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேவநாதன் சொத்து விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவின்படி, 76 சொத்துப்பட்டியல் விபரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது, 'சென்னை, திருவள்ளூர் உட்பட பல்வேறு இடங்களில், 136 ஏக்கரில், 440 கோடி ரூபாய் சந்தை மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. ஆனால், சொத்து மதிப்பை, 30 கோடி ரூபாயாக குறைத்து காட்டி, ஓராண்டிற்கு மேல் சிறையில் உள்ள என்னை தொடர்ந்து சிறையில் வைக்க அரசு முயற்சித்து நடக்கிறது' என, தேவநாதன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. பாதிக்கப்பட்டோர் தரப்பில், 'தேவநாதன் தாக்கல் செய்த பெரும்பாலான சொத்துக்கள், வில்லங்க சொத்துக்கள் மற்றும் 3வது நபர்களின் பெயரில் இருக்கும் சொத்துக்கள் என தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு சொத்துக்களை வைத்து நிவாரணம் கிடைக்காது,' என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ''ஓராண்டுக்கு மேல் தேவநாதன் சிறையில் இருந்தும் விசாரணையில் பயன் ஏற்படவில்லை. வழக்கை விசாரிக்கும் பொருளாதார குற்றப்பிரிவின் விசாரணையிலும் முன்னேற்றம் இல்லை,'' என அதிருப்தி தெரிவித்தார். பின், ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை