மழைநீர் உள்வாங்காத கால்வாய் மேம்பாடு
ஆதம்பாக்கம், ஆலந்துார் மண்டலம் நங்கநல்லுார், ஆதம்பாக்கம் ஆகிய பகுதிகளில், வடிகாலில் இருந்து வெளியேறும் மழைநீர், ஆதம்பாக்கம் ஏரியில் சேகரமாக, பிரதான வழித்தடமாக ஜீவன் நகர் கால்வாய் உள்ளது.மொத்தம் 910 மீட்டர் நீளமுடைய கால்வாய் வழியே ஏரியை அடைந்து, வீராங்கால் ஓடை வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு மழைநீர் செல்கிறது.இந்த கால்வாயில் மண்டி கிடந்த குப்பை, சகதி அகற்றப்பட்ட நிலையிலும், சமீபத்தில் பெய்த மழையின்போது, நீரோட்டம் சீராக இல்லை. இதையடுத்து, கால்வாயை துார்வாரி, அகலப்படுத்தி, கரைகள் பலப்படுத்தும் பணிகளை, மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இப்பணியில், ரோபாட்டிக் இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. அடுத்த சில நாட்களில் இப்பணி முடிந்ததும், நீரோட்டம் சீராக இருக்கும் என, மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.