உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.10,800 கோடி முதலீடு செய்தாரா? அவதுாறு வழக்கில் டி.ஆர்.பாலு ஆஜர்

ரூ.10,800 கோடி முதலீடு செய்தாரா? அவதுாறு வழக்கில் டி.ஆர்.பாலு ஆஜர்

சென்னை, :தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை மீது தொடரப்பட்ட அவதுாறு வழக்கில், தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி, ஒன்றரை மணி நேரம் சாட்சியாக பதில் அளித்தார். கடந்த, 2023, ஏப்., 14ல், 'தி.மு.க.,, பைல்ஸ்' என்ற ஆவணத்தை, அண்ணாமலை வெளியிட்டார். அதில், தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு உட்பட, அக்கட்சியின் முக்கிய புள்ளிகள், 12 பேரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதை எதிர்த்து, டி.ஆர்.பாலு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், அண்ணாமலை மீது அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகி, ஒன்றரை மணி நேரம் டி.ஆர்.பாலு சாட்சியம் அளித்தார். பின், அவர் அளித்த பேட்டி: நான், 1957 ல் இருந்து அரசியலில் உள்ளேன். மத்திய அமைச்சராக இருந்துள்ளேன். கட்சியிலும் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறேன். என் பெயருக்கும், புகழுங்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில், பா.ஜ., தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை அவதுாறுகளை பரப்பி உள்ளார். என் பெயரில், 21 நிறுவனங்கள் இருப்பதாகவும், இதன் வாயிலாக நான், 10,800 கோடி ரூபாயை சட்ட விரோதமாக முதலீடு செய்து இருப்பதாகவும் கூறியுள்ளார். இதில் உண்மை இல்லை. என் பெயரில் மூன்று நிறுவனங்கள் தான் உள்ளன. அதுவும் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளன. அண்ணாமலை சுய விளம்பரத்திற்காக இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த வழக்கில் சாட்சியம் அளித்துள்ளேன். வழக்கு வரும், 22ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ