உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சித்தாலப்பாக்கம் ஊராட்சி ஏரியில் குப்பை கொட்டியதா?

சித்தாலப்பாக்கம் ஊராட்சி ஏரியில் குப்பை கொட்டியதா?

சென்னை, பெரும்பாக்கம் ஏரியில் குப்பைகளை கொட்டியது, சித்தாலப்பாக்கம் ஊராட்சியா என்பது குறித்து ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.தென்சென்னையில் வேங்கைவாசல், சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்கு நடுவில், பெரும்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. கடந்த 1960ல் 450 ஏக்கராக இருந்த இந்த ஏரி, ஆக்கிரமிப்புகளால் தற்போது, 258 ஏக்கராக சுருங்கியுள்ளது. சித்தாலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கும் குப்பை, பெரும்பாக்கம் ஏரியில் கொட்டப்படுவதாகவும், இதனால் ஏரி மாசடைவதாகவும், செங்கல்பட்டை சேர்ந்த வெங்கடேசன் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:தற்போது, பெரும்பாக்கம் ஏரி நிரம்பியுள்ள நிலையில், மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்கப்படாத குப்பைகள், ஏரிக்குள் கொட்டப்படுவதாக, மனுதாரர் கூறியுள்ளார். பெரும்பாக்கம் ஏரியில் கொட்டப்பட்ட கழிவுகள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும்.பெரும்பாக்கம் ஏரியில், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து, சித்தாலப்பாக்கம் ஊராட்சி குப்பை கொட்டியிருந்தால், அதன் மீது, 2016 திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்தாலப்பாக்கம் ஊராட்சி குப்பை கொட்டாவிட்டால், யார் கொட்டியது என்பதை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், செங்கல்பட்டு கலெக்டர், செயின்ட் தாமஸ் மவுண்ட் ஊராட்சி ஒன்றியம், சித்தாலப்பாக்கம் ஊராட்சி ஆகியவை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜனவரி 7ல் நடக்கும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ