தினமலர் கார்ப்பரேட் லீக் கிரிக்கெட்: சால்காம்ப் சாம்பியன் இறுதிப்போட்டியில் இன்போசிஸ் அணியை வீழ்த்தியது
சென்னை:'தினமலர் கார்ப்பரேட் லீக்' தொடரில் நேற்று நடந்த விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், இன்போசிஸ் சென்னை டி.சி., அணியை வீழ்த்தி, சால்காம்ப் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.சென்னை, மேடவாக்கத்தில், தினமலர் கார்ப்பரேட் லீக் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான டி - 20 கிரிக்கெட் போட்டிகள், கடந்த 24ம் தேதி துவங்கின. இதில், 32 அணிகள் பங்கேற்றன. 'சூப்பர் நாக் -- அவுட்'
போட்டிகள், மேடவாக்கம் 'வைட் பீல்ட்' மற்றும் சுமங்கலி கிரிக்கெட் மைதானத்தில், 'சூப்பர் நாக் -- அவுட்' முறையில் நடந்தன. இதன் இறுதிப்போட்டியில், இன்போசிஸ் சென்னை டி.சி., அணியும் சால்காம்ப் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.நேற்று நடந்த இறுதிப்போட்டியை, 'தினமலர்' நாளிதழ் இணை நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாச ராமசுப்பு, 'நம்ம பேமலி' குரூப் நிறுவனர் கார்த்திக் பொன்னுசாமி துவக்கி வைத்தனர்.இதில், 'டாஸ்' வென்ற சால்காம்ப் அணியின் கேப்டன் சுகனேஷ், பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்கத்தில் சில விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும், அணி வீரர் கோபால், 43 பந்துகளில், 5 பவுண்டரி உட்பட 50 ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்தினார். ஆட்ட நேர முடிவில் அதிரடியாக விளையாடிய கேப்டன் சுகனேஷ், 23 பந்துகளில், 3 பவுண்டரி, 4 சிக்ஸ்கள் உட்பட 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அருண், 18, மோகன், 13, ரன்கள் எடுத்து கைகொடுக்க, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கு
இன்போசிஸ் அணி சார்பில் மோகன்ராஜ் 4, சீனு துராகா, கவி, தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இன்போசிஸ் அணி வீரர்கள் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். முதல் பத்து ஓவர்களில் மூன்று விக்கெட் மட்டுமே இழந்து 84 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால், 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனால், சால்காம்ப் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியது.'இன்போசிஸ்' அணியின் சார்பில், அதிகபட்சமாக மரிய செல்வம், 25 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 35 ரன்கள்; சிவா ஆட்டமிழக்காமல், 14 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 25 ரன்கள்; இளங்கோவன் ராமு, சஞ்சு, மோகன்ராஜ் தலா 15 ரன்கள் எடுத்தனர்.சால்காம்ப் அணியின் சார்பில், சுகனேஷ், 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். மேலும், கோபால், 2, ராஜேஷ், லட்சுமணன், நந்தா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
பைனல் நாயகர்கள்
ஆட்ட நாயகன் கோபால் சால்காம்ப்சிறந்த பேட்ஸ்மேன் சுகனேஷ் சால்காம்ப் சிறந்த பந்துவீச்சாளர் மோகன்ராஜ் இன்போசிஸ்
இணைந்த கைகள்
'தினமலர்' நாளிதழ் மற்றும் 'நம்ம பேமிலி குரூப்' உடன் இணைந்த செயல்பட்ட நிறுவனங்கள், பார்வதி ஹாஸ்பிடல் கார்ப், ஸ்போர்டஸ், கிட்டே புட்டே, ஹெச்.டி.எப்.சி., வங்கி அக் ஷய கல்பா ஆர்கானிக், ட்ராப்டாக்ஸி.இன், ஜி.ஓ.சி., ஸ்போர்ட்ஸ், மாம்பலம் ஐயர்ஸ்.
தொடரில் சாதித்தோர்
தொடர் நாயகன் சுரேந்தர் எஸ்.சி., ப்ளூஸ். தொடர் சிறந்த பேட்ஸ்மேன் இளங்கோ இன்போசிஸ்தொடர் சிறந்த பவுலர் சுரேந்தர்- எஸ்.சி., ப்ளூஸ்தொடர் சிறந்த பீல்டர் ராஜேஷ் சால்காம்ப்
அணிகள் பெற்ற பரிசுத்தொகை
சால்காம்ப் அணி ரூ.1.50 லட்சம்இன்போசிஸ் அணி ரூ.75,000ஹெச்.சி.எல்.டெக் சூப்பர்நோவாஸ் ரூ.50,000