உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புது மீன் அங்காடி அமைக்க ஒதுக்கிய இடத்தை பூங்காவுக்கு ஒதுக்கியதால் அதிருப்தி:தெருவை ஆக்கிரமித்த சந்தையை அகற்ற 45 ஆண்டாக தொடரும் போராட்டம்

புது மீன் அங்காடி அமைக்க ஒதுக்கிய இடத்தை பூங்காவுக்கு ஒதுக்கியதால் அதிருப்தி:தெருவை ஆக்கிரமித்த சந்தையை அகற்ற 45 ஆண்டாக தொடரும் போராட்டம்

வியாசர்பாடி:வியாசர்பாடி, சாஸ்திரி நகரில், குடியிருப்புகள் நடு வே தெருவை ஆக்கிரமித்து நடத்தப்படும் மீன் சந்தையால், பெரும் இன்னல்களை சந்தித்து வரும் பகுதி மக்கள், அதை அகற்ற 45 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்நிலையில், புது மீன் அங்காடி அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருவதால், பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை வியாசர்பாடி, 45வது வார்டுக்குட்பட்ட சாஸ்திரி நகரில் 17, 18 மற்றும் 19வது தெருக்கள் உள்ளன. இங்குள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் லட்சக்கணக்கானோர் வசிக்கின்றனர். கடந்த 45 ஆண்டுகளுக்கு முன், பர்மாவில் இருந்து வெளியேறிய தமிழர்கள், இங்கு குடியேறினர். அவர்கள், பிழைப்புக்காக, குடியிருப்புகளுக்கு மத்தியில், தெரு சாலையையொட்டி மீன் வியாபாரம் உள்ளிட்ட சிறு சிறு கடைகள் அமைத்தனர். காலப்போக்கில் மீன் கடைகள் நிரந்தரமானதுடன், சாலையும் கபளீகரம் செய்யப்பட்டுவிட்டது. 50க்கும் மேற்பட்ட மீன் விற்பனை கடைகள் இருப்பதால், 25 அடி அகல சாலை, 5 அடியாக சுருங்கியது. ஏமாற்றம் இந்த கடைகளில் மீதமாகும் மீன் வகைகளை குடியிருப்புகள் முன் விட்டுச் செல்வதும், அசுத்தமான தண்ணீர் ஓடுவதாலும் கடும் துர்நாற்றம் ஏற்படுவதோடு, சுகாதார சீர்கேடிலும் சிக்கி அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். அதனால், மீன் அங்காடியை வேறு இடத்திற்கு மாற்ற, அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 2006ல் தி.மு.க., ஆட்சிக் காலத்தில் வியாசர்பாடி, சாஸ்திரி நகர், 16வது தெருவில், 1,826 சதுரடி உடைய காலி நிலத்தில் நவீன மீன் அங்காடி வளாகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. 2007ல் பெரம்பூர் மார்க்.கம்யூ., கட்சி எம்.எல்.ஏ., மகேந்திரன் சார்பில், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. நவீன அங்காடிக்காக தேர்வு செய்யப்பட்ட இடம் பொதுப்பணித் துறைக்கு சொந்தமானது என்பதால், அத்துறையினரிடம் தடையின்மை சான்றிதழ் வாங்க, மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பல ஆண்டுகள் கடந்து, 2021ல் அங்காடி அமைக்க அனுமதி கிடைத்தது; 86.60 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. கடந்த 2021ல் இருந்த மாநகராட்சி இணை ஆணையர் (சுகாதாரம்) மணி எஸ் நாரணவரே, மீன் கடைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தார்; மக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து செயல்படும் மீன் கடைகளை அகற்றவும் உத்தரவிட்டார். ஆனால், 2021ல் தி.மு.க., ஆட்சி மாற்றத்திற்கு பின், மீன் அங்காடி அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நவீன மீன் அங்காடி அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில், பூங்கா அமைக்கப்படுவதாக, தண்டையார்பேட்டை மண்டல குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதால், 45 ஆண்டுகளாக போராடி வரும் வியாசர்பாடி, சாஸ்திரி நகர் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முட்டுக்கட்டை இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ., ஆர்.டி.சேகர், நவீன மீன் அங்காடி அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில், மீன் கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, பூங்கா அமைக்க ஆர்வம் காட்டி வருகிறார். எம்.எல்.ஏ.,வை மீறி மீன் கடைகளை அமைத்து தர முடியாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து, வி.சி., கட்சி வார்டு கவுன்சிலர் கோபிநாத்திடம் முறையிட்ட போது, 'எம்.எல்.ஏ.,வை மீறி மீன் கடைகளை அமைத்து கொடுத்தால், கூட்டணி கட்சிக்குள் பிரச்னை ஏற்படும்' என்கிறார். மக்கள் பணியாற்ற வந்திருக்கும் எம்.எல்.ஏ., கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், மக்களின் விரோதபோக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். எம்.எல்.ஏ., சேகர், மீன் வியாபாரிகளிடம் மாமூல் வாங்கி, அங்காடி அமைக்கும் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார். ஒரு கடைக்கு தினம் 500 ரூபாய் என மாதம் 25,000 ரூபாய் லஞ்சமாக தரப்படுகிறது. சாஸ்திரி நகர் மீன் சந்தையில், 50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அதனால், மீன் அங்காடி அமைக்க ஒதுக்கிய இடத்தில் பூங்கா அமைக்கும் பணிகளை அவசர கதியில் செய்து வருகிறார். மக்களின் கோரிக்கைகளை மீறி, அந்த இடத்தில் பூங்கா அமைத்தால், அதிகாரிகளின் மீது நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்படும். தெருவை ஆக்கிரமித்துள்ள மீன் கடைகளை அகற்ற, 10க்கும் மேற்பட்ட சென்னை கலெக்டர்கள், தலைமை செயலர், அரசு முதன்மை செயலர் உட்பட பல அதிகாரிகளிடம், 100க்கும் மேற்பட்ட மனுக்களை கொடுத்துள்ளோம். அதிகாரிகளால் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை. 45 ஆண்டுகளாக மனுதாரர்களை அலைக்கழித்து வருவதுடன், மனுக்களையும் நீர்த்து போக செய்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர். புதிதாக மீன் அங்காடி அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்திலும் குடியிருப்புகள் உள்ளன. அங்கு மீன் அங்காடி அமைத்தால், துர்நாற்றம் எழும் என கூறி, அப்பகுதியில் வசிப்போர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிரச்னையை தவிர்க்கவே, பழைய இடத்திலேயே மீன் சந்தை நடந்து வருகிறது. ஒதுக்கிய இடத்தில் பூங்கா அமைக்கப்படுகிறது. - மாநகராட்சி அதிகாரிகள் நாங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து, இங்கு வந்து மீன் வியாபாரம் செய்து வருகிறோம். விற்பனை முடிந்தவுடன் மீதமுள்ள மீன் வகைகளை, வீடுகளின் ஓரமாக வைத்துவிட்டு செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. மீன் வியாபாரிகள் சங்கத்தை மீறி, எங்களால் மாற்று இடத்திற்கு போக முடியாது. இதனால், எம்.எல்.ஏ., கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாமூல் கொடுக்க வேண்டியுள்ளது. இங்கு, தெருவை ஆக்கிரமித்து தான் மீன், இறைச்சி கடைகள், காய்கறி கடைகள் இயங்கி வருகின்றன. தற்போதைய மீன் கடைகளுக்கு கட்டமைப்பு வசதிகள், கழிப்பறை வசதிகள் இல்லை. நவீன மீன் அங்காடி கட்டிக் கொடுத்தால் எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்; மாநகராட்சிக்கும் வருவாய் கிடைக்கும். - மீன் வியாபாரிகள், சாஸ்திரி நகர், வியாசர்பாடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ