மாவட்ட சதுரங்க சாம்பியன்ஷிப் செங்கை சிறுவன் - சிறுமி அபாரம்
சென்னை, செங்கல்பட்டு மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி, பம்மல், சங்கர் நகரில் உள்ள ஸ்ரீசங்கரா குளோபல் அகாடமியில், கடந்த இரண்டு நாட்கள் நடந்தன.இதில், ஏழு, 11, 15 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட, இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.போட்டியில், செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 400 சிறுவர் - சிறுமியர் பங்கேற்றனர்.ஏழு வயதில் சிறுவரில் துருவன், சிறுமியரில் அனிகா ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர். அதேபோல், 11 வயது பிரிவில், சாய்சரன் மற்றும் ஸ்ரீனிகா வெற்றிபெற்றனர். அதன்பின் நடந்த, 15 வயது பிரிவில் கிருத்திக் முருகன் மற்றும் மிருணாளினி ஆகியோரும், 19 வயது பிரிவில், ஆகாஷ் மற்றும் பத்மினி ஆகியோரும் முதலிடங்களை பிடித்தனர்.தவிர, ஒவ்வொரு பிரிவிலும், முதல் 20 இடங்களை பிடித்த சிறுவர்களுக்கும், 15 இடங்களை பிடித்த சிறுமியருக்கும் என, மொத்தம் 160 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.போட்டியில், முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளனர்.