உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடவடிக்கை பாயுமென ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கலக்கம்! வணிகர்கள் ஒன்று திண்டு போராடியதால் சிக்கல்

நடவடிக்கை பாயுமென ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கலக்கம்! வணிகர்கள் ஒன்று திண்டு போராடியதால் சிக்கல்

சென்னை: சென்னை பிராட்வேயில், ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி அதிகாரிகளை சிறைபிடித்த வணிகர்கள், லஞ்சம் கேட்டு மிரட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, 50,000க்கும் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சக குழு விசாரணையை முடித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதால், தங்கள் மீது நடவடிக்கை பாயும் என்பதால், ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் மளிகை, ஜவுளி, பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில், 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டத்தின் கீழ், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வணிகம் செய்வோர், கட்டாயம் ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்டும். அதன்படி, தமிழகத்தில், 12 லட்சம் வணிகர்கள் ஜி.எஸ்.டி., பதிவு செய்துள்ளனர். ஜி.எஸ்.டி., தாக்கலில் கண்டறியப்படும் மோசடி உள்ளிட்டவை காரணமாக, மத்திய ஜி.எஸ்.டி., அதிகாரிகள், கடைகளில் ஆய்வு செய்வது வழக்கம். சென்னை, பிராட்வே அடுத்த தங்க சாலை அருகில், மொத்த வியாபார பாத்திர கடைகள் உள்ளன. அங்குள்ள இரு கடைகளில், கடந்த மாத இறுதியில், ஜி.எஸ்.டி., அதிகாரிகள் சோதனைக்கு சென்றனர். அவர்களிடம், கடை உரிமையாளர், அடையாள அட்டையை கேட்டபோது, அதிகாரிகள் தர மறுத்துள்ளனர். இதனால் அங்கிருந்த, 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திரண்டு, 'நீங்கள் அதிகாரிகள் என்று எங்களுக்கு எப்படி தெரியும்; லஞ்சம் கேட்டு மிரட்டும் நீங்கள் போலி அதிகாரிகளாக இருக்கலாம்' எனக்கூறி, அவர்களை சிறைபிடித்தனர். பின், போலீசார் வந்து விசாரித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள்தான் என்பதை உறுதி செய்து, மீட்டுச் சென்றனர். இந்நிலையில், ஜி.எஸ்.டி., அதிகாரிகள் பல லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு, ஒவ்வொரு நிறுவனமாக வந்து மிரட்டுகின்றனர் எனவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வணிகர்கள் தங்கள் கடைகளை அடைத்து, முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல சங்கங்கள் இணைந்து, சவுகார்பேட்டை, ரிச் தெரு, பிராட்வே உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளில், 50,000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்தன. இந்த விவகாரம், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரை சென்றது. அவர் அந்த சமயத்தில் சென்னையில் இருந்தார். இதையடுத்து, அதிகாரிகள் சிறைபிடிப்பு, வணிகர்கள் போராட்டம், அதற்கான பின்னணி தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க, குழு அமைக்கப்பட்டது. அக்குழு, சில நாட்களுக்கு முன் சென்னை வந்து, ரகசிய விசாரணை நடத்தி, சுங்க வரி அலுவலகத்தில் ஆலோசனையும் நடத்தியது. இதன் முதற்கட்ட அறிக்கையை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அக்குழுவினர் சமர்ப்பித்துள்ளனர். அதன் அடிப்படையில், விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதுகுறித்து, மத்திய நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில் ஆய்வு என்ற பெயரில், தவறு செய்த மத்திய ஜி.எஸ்.டி., அதிகாரிகள், மத்திய அரசின் விசாரணை வளையத்திற்குள் வந்துவிட்டனர். குழு அறிக்கையின்படி, தவறு செய்த அதிகாரிகள் மீது, விரைவில் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். மத்திய அமைச்சரிடம் அறிக்கை சென்றுள்ளதால், எந்த நேரத்திலும் தங்கள் மீது நடவடிக்கை பாயலாம் என்பதால், சென்னையில் உள்ள அதிகாரிகள் பலரும் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

SIVA
ஆக 10, 2026 08:29

முதலில் மக்கள் விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது gst பில் வேண்டும் என்று கேட்டு வாங்க வேண்டும் பில் இல்லை என்றாலும் பரவாயில்லை எனக்கு gst இல்லாமல் கொடு என்று சொன்னால் வியாபாரிகள் என்ன செய்வார்கள் ....


KRISHNAN R
ஆக 09, 2026 12:57

வணிகர்கள் நேர்மையாளர் ஆக இருக்கலாம், ஊழியர்கள் அதைவிட நல்லவர ஆக இருக்கலாம். இதெல்லாம் விட மக்களுக்கு தேவை அவர்கள் செலுத்தும் வரி, அரசு கணக்கிற்கு சென்ற அத்தாட்சி சாலான்,, வேண்டும். அதற்கு தினமலர், உதவ வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை