தீபாவளி சீட்டு நடத்திய ரூ.67 லட்சம் மோசடி: அண்ணன், தங்கை கைது
சென்னை, வியாசர்பாடி வீரபாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 65, சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகார்:ஆர்.எஸ்.என்டர்பிரைசஸ் என்ற பெயரில், கோகுல்நாத்தும், அவரது சகோதரி சவுமியாவும் தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர். மாதம், 1,000 ரூபாய் வீதம் 12 மாதங்கள் செலுத்தினால், 15,000 ரூபாய் தருவதாகவும், 30 பேரை சேர்த்துவிட்டால், ஒரு கார்டுக்கு, 15,000 ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறினர்.அவர்களது பேச்சை உண்மை என நினைத்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என, 595 பேரை சேர்த்துவிட்டேன். அதற்கான, 66.90 லட்சம் ரூபாய் செலுத்தினேன். அதன்பின், கட்டிய பணத்தை கேட்டபோது தராமல் ஏமாற்றி வருகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, இழந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.இதுகுறித்து, வழக்கு பதிந்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட வியாசர்பாடியைச் சேர்ந்த கோகுல்நாத், 35, அவரது சகோதரி சவுமியா, 32 ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.