உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி துாய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம் தி.மு.க., கூட்டணி கட்சிகள் பங்கேற்பு

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி துாய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம் தி.மு.க., கூட்டணி கட்சிகள் பங்கேற்பு

சென்னை: பணி நிரந்தரம் செய்யப்படும் என்ற தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, துாய்மை பணியாளர்கள் நேற்று, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களுக்கு ஆதரவாக தி.மு.க., கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர். சென்னை மாநகராட்சி, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அம்மண்டலங்களில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில் பணியாற்றிய துாய்மை பணியாளர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக, மாநகராட்சி ரிப்பன் மாளிகை, மெரினா கடற்கரை, தலைமை செயலகம் உள்ளிட்ட இடங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். 86 நாட்கள் இதை தொடர்ந்து, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, துாய்மை பணியாளர்கள் நேற்று, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, இ.கம்யூ., - மார்க்.கம்யூ., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்று பேசினர். கூட்டத்தில், 'தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தப்படி பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டம் தொடரும்' என, துாய்மை பணியாளர்கள் கோஷம் எழுப்பினர். இதுகுறித்து, உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி கூறியதாவது: துாய்மை பணியாளர்கள், 86 நாட்களாக போராடி வருகின்றனர். இவர்களை சமாதானப்படுத்த மூன்று வேளை உணவு அளிப்பதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உணவு வேண்டும் என்ற கோரிக்கையை, உங்களிடம் யார் கேட்டது. உங்களுடைய தேர்தல் வாக்குறுதிப்படி, பணி நிரந்தரம் செய்யுங்கள். போராட்டம் தொடரும் உணவு, இரண்டு மண்டலங்களில் மட்டும் ஊதியம் உயர்வு உள்ளிட்ட சலுகைகளை வழங்குவது, போராட்டத்தை முடக்குவதற்காகவே செய்யப்படுகிறது. எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை, போராட்டம் தொடரும். அறநிலையத் துறையில், 2,500 பேருக்கு பணி நிரந்தரம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிலில் வேலை செய்தால் சுத்தம், குப்பை அகற்றினால் அசுத்தமா? கொரோனா காலத்தில் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. ஆனால் துாய்மை பணியாளர்கள் தான் இரவு பகலாக பணியாற்றி வந்தோம். முதல்வர் தலையிட்டு, எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி