வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கொசுவலை எல்லாருக்கும் கொடுக்கலாம் இலவசமாக
மேலும் செய்திகள்
கொசு ஒழிப்பு பணியில் சுகாதார பணியாளர்கள்
08-Jul-2026
சென்னை: கோடை முடிந்தும் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், 'ஏடிஸ்' வகை கொசுக்களின் ஆதிக்கத்தால், டெங்கு பாதிப்பு மக்களை மிரட்ட தொடங்கிவிட்டது. சென்னையில், 15 நாட்களில் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொசு ஒழிப்பில் மாநகராட்சி அக்கறை காட்டாததே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பொதுமக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். சென்னையில் கோடை வெயில் தாக்கம் இன்னும் குறையாமல், வெயில் வாட்டி வதைக்கிறது. இருப்பினும், அவ்வப்போது ஆங்காங்கே மழையும் பெய்து வருகிறது. காலநிலை மாற்றம் காரணமாக, மக்களுக்கு பல்நோய் நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ்' வகை கொசு உற்பத்தி தொடங்கி விட்டது. இதன் தாக்கம் காய்ச்சல் பாதிப்பை அதிகரித்துள்ளது. திறந்தவெளி இடங்களில் உள்ள தேங்காய் சிரட்டை, டயர், மூடி இல்லாத தொட்டிகளில் தேங்கும் நன்னீரில், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. கடந்த ஆண்டுகளில் இடப்பட்ட முட்டை இருக்கும் இடங்களில், நன்னீர் தேங்கும்போது, அவை கொசு உற்பத்தியை அதிகரித்துவிட்டன. 'ஏடிஸ்' கொசுக்கள், பகலில் கடிக்கும்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த மாதத்தில், 15 நாட்களில், 100க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொசு ஒழிப்பு பணியில் மாநகராட்சி கவனம் செலுத்தாததே, இந்த பாதிப்புக்கு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொசு ஒழிப்பு பணியில், 3,300 பணியாளர் உள்ளனர். இவர்கள் ஜூன் மாத துவக்கத்தில் கொசு ஒழிப்பு புகை பரப்பும் பணியை தொடங்கிவிடுவர். ஆனால், இந்தாண்டு அவ்வாறு கொசு ஒழிப்பு பணி நடக்கவில்லை. டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியபின், மாநகராட்சி கொஞ்சம் விழிப்படைந்தது. சில நாட்களுக்கு முன் கொசு ஒழிப்பு பணியை, மாநகராட்சி தொடங்கியுள்ளது. இருந்தும், கொசுப்புழுவை ஒழிக்கும் 'மாலத்தியான்' மருந்து கொள்முதல் பிரச்னையால் பெயரளவில் புகை பரப்பப்படுகிறது. நோய் தடுப்பு ஊழியர்களில், கணிசமான நபர்களை மழைநீர் வடிகால் துார்வார, வரி வசூல், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுத்தி விட்டதும், கொசு பெருக காரணமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சுகாதாரத்துறையில் 4,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருந்தும், சுகாதார நடவடிக்கையில் தீவிரமாக செய்ய முடியவில்லை. டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை நேரத்தில், குப்பை கையாளுதல், கொசு உற்பத்தி தடுப்பு ஆய்வு பணி நேரத்தில் வரி வசூல், கட்டட கழிவு அகற்றம், போஸ்டர் கிழிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகிறோம். அதோடு, 'அம்மா' உணவகங்கள் கண்காணிப்பு, பிறப்பு, இறப்பு பதிவு, பிளாஸ்டிக் பறிமுதல் போன்ற பணிகள் செய்கிறோம். பொறியியல், வருவாய்த்துறை பணிகளை எங்களிடம் தள்ளி விட்டுள்ளனர். மொத்தமுள்ள, 3,300 நோய் தடுப்பு ஊழியர்களில், 400 பேரை மழைநீர் வடிகால் துார் வாரவும், 800 பேரை வரி வசூல் பணிக்கு மாற்றப்பட்டனர். டெங்கு பாதிப்பை கருத்தில் கொண்டு, ஊழியர்கள் கொசு ஒழிப்பில் முழுமையாக ஈடுபட, பணி வரன்முறை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். டெங்கு காய்ச்சல் பாதிப்பு, ஜூன் மாதத்திலேயே மக்களை திறணடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், மாநகராட்சி நிர்வாகம், கொசு ஒழிப்பு பணியில் சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும் என, சென்னை மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், அரசின் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: முன்கூட்டியே டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். லேசான காய்ச்சல் என்றாலும், அரசு மருத்துவமனைளுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது. இதில், அலட்சியம் காட்டினால் உயிரிழப்புக்கு வழிவகுத்துவிடும். சுயமாக மருந்து, மாத்திரை வாங்கி பயன்படுத்துவது கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர். 2026ம் ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு மாதம் பாதித்த நபர்கள் ஜன., 311 பிப்., 202 மார்ச் 167 ஏப்., 130 மே 154 ஜூன் 205 ஆண்டு பாதித்த நபர்கள் 2024 5,751 2025 4,756 ஜூன், ஜூலை மாதம் ஒப்பீடு 2024 ஜூன் 183 ஜூலை 501 2025 ஜூன் 195 ஜூலை 331
கொசுவலை எல்லாருக்கும் கொடுக்கலாம் இலவசமாக
08-Jul-2026