உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின் கேபிள்களை சேதப்படுத்தும் வடிகால் பணி ஒப்பந்ததாரர்கள்

மின் கேபிள்களை சேதப்படுத்தும் வடிகால் பணி ஒப்பந்ததாரர்கள்

சென்னையில் தரைக்கு அடியில் மின்சாரம் செல்லும் கேபிளை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் சேதப்படுத்தி விடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து, மின் வாரிய பிரிவு அலுவலக பொறியாளர்கள், பணியாளர்கள் கூறியதாவது: தரைக்கு அடியில் மின்சாரம் செல்லும் கேபிள், எந்த வழித்தடத்தில் செல்கின்றன என்ற விபரம், பிரிவு அலுவலக பொறியாளர்கள், ஊழியர்களுக்கு மட்டுமே தெரியும். அவர்களிடம், எந்த வித தகவலும் தெரிவிக்காமல், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சாலையில் பள்ளம் தோண்டும் போது, மின் கேபிளை பழுதாகி விடுகின்றன. தொடர் அறிவுறுத்தலை அடுத்து, தொலைதொடர்பு நிறுவனங்கள், நெடுஞ்சாலை துறையினர் தங்களின் பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டும் முன், சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கின்றனர். அதற்கு ஏற்ப அவர்கள் பணியை துவக்கி, முடிக்கும் வரை மின் ஊழியர்களும் உடன் இருக்கின்றனர். அதேசமயம், சென்னை மாநகராட்சி சார்பில், மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், எந்த வித முன்னறிவிப்பும் இன்றி, சாலையில் இஷ்டத்துக்கு பள்ளம் தோண்டுகின்றனர். அவர்களே, மின் கேபிளை எடுத்து, சாலையில் ஓரத்தில் போட்டு விடுகின்றனர். மின் வினியோக பெட்டியை சேதப்படுத்தி விடுகின்றனர். இதனால், திடீரென மழை பெய்யும் போது, அதிலிருந்து ஏற்படும் மின் கசிவால், மின் விபத்து ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக, பல முறை வலியுறுத்தியும் மாநகராட்சி அதிகாரிகளும், ஒப்பந்தாரர்களும் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். மின் கேபிளை பழுதாக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க முயன்றால், எங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகள் அதை தடுத்து விடுகின்றனர். எனவே, மின் கேபிள், மின் வினியோக பெட்டிகளை சேதப்படுத்தும் போது, ஒப்பந்ததார்களிடம் இருந்து இழப்பீட்டு தொகையை வசூலிக்கவும், அவர்கள் மேல் போலீசில் புகார் அளித்து சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்கவும், வாரிய உயரதிகாரிகள், பிரிவு அலுவலகங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை