ஒக்கியம்மடுவில் தடையின்றி ஓடும் வெள்ளம் வேளச்சேரிக்கு கைகொடுத்த வடிகால் ஷட்டர்கள்
சென்னை, தென் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள 64 ஏரிகளில் இருந்து வெளியேறும் வெள்ளம், ஒக்கியம்மடு வழியாக பகிங்ஹாம் கால்வாய் சென்று, முட்டுக்காடு கடலில் சேர்கிறது.தெற்கு திசையில் இருந்து 52 ஏரிகளின் நீரும், வடக்கு திசையில் இருந்து 12 ஏரிகளின் நீரும் சேர்ந்து, ஒக்கியம்மடு வழியாக செல்கிறது.ஆனால், தெற்கு திசையில் இருந்து வரும் வெள்ளம், நேராக செல்ல முடியாமல், கூம்பு வடிவில் உள்ள நிலப்பரப்பில் சுற்றிச்சென்றதால், வெள்ளம் மெதுவாக சென்றது. மேலும், வடக்கு திசையில் இருந்து செல்லும் வெள்ளமும் தடைபட்டது.இதனால், கூம்பு வடிவில் இருந்த பட்டா இடத்தை மீட்டு நேர்வழியாக மாற்றும் பணியை, நீர்வளத்துறை, 15 நாட்களுக்குமுன் துவங்கியது.இதன் காரணமாகவும், சதுப்பு நிலத்தில் ரேடியல் சாலையின் தெற்கு திசையில் சதுப்பு நிலத்தில் துார்வாரி நீர்வழிப்பாதை அமைத்ததால் வெள்ளம்வேகமாக வடிந்தது. ஓ.எம்.ஆர்., குறுக்கே செல்லும் ஒக்கியம்மடுவில் நான்கு துளைகள் இருந்தன.அடைப்பில் இருந்த ஒரு துளையை சுத்தம் செய்து, துார்வாரி ஐந்து துளையாக மாற்றப்பட்டது. இதனால், நீரோட்டம் வேகமாக சென்றது. 26,000 கனமீட்டர் மண் அகற்றம்
ஒக்கியம்மடுவில் கூம்பு வடிவ பட்டா நிலம், தங்கவேல் கல்லுாரிக்கு சொந்தமானது. இதை அகற்றினால், வெள்ள பாதிப்பு குறையும் என அதிகாரிகள் கருதினர். இதையடுத்து, கூம்பு வடிவில் இருந்த 2.80 ஏக்கர் காலி இடம் நீர்வழிபாதையாக மாற்றப்பட்டது. அதில் இருந்து, 610 மீட்டர் நீளம், 15 அகலம், 4 மீட்டர் ஆழத்தில், 26,000 கன மீட்டர் அளவு மண் அகற்றப்பட்டது. இந்த பணி, நீர்வளத்துறை சார்பில், ஆறு பொக்லைன் இயந்திரம் கொண்டு, 10 நாட்கள் நடந்தன.வேளச்சேரிக்கு கைகொடுத்த வடிகால் ஷட்டர்கள் ஆதம்பாக்கம் மற்றும் வேளச்சேரி ஏரிகளின், இரண்டு திசைகளில் இருந்து வரும் வீராங்கால் கால்வாய், வேளச்சேரி ரயில் நிலையம் அருகே ஒன்று சேர்ந்து, சதுப்பு நிலம் நோக்கி செல்கிறது. இந்த கால்வாயில் வெள்ளம், 7 அடி உயரும்போது, இதோடு இணைத்துள்ள வடிகால்கள் வழியாக பின்னோக்கி சென்று, குடியிருப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதை தடுக்கும் வகையில், அதிக பாதிப்புக்கு உள்ளாகும், கல்கி நகர், சீனிவாசா நகர், குபேரன் நகர், விஜய நகர், ராம்நகரில் உள்ள வடிகால்கள், வீராங்கால் கால்வாயில் சேரும் இடத்தில் ஷட்டர் அமைக்கப்பட்டது. கால்வாயில், 7 அடி வெள்ளம் உயர்ந்தபோது ஷட்டர் மூடப்பட்டது. பின், அங்கு அமைக்கப்பட்ட 100 எச்.பி., மோட்டார் கொண்டு, வடிகாலில் வரும் வெள்ளத்தை இறைத்து கால்வாயில் விடப்பட்டது. இதனால், மேற்கண்ட பகுதியில் வெள்ள பாதிப்பு தடுக்கப்பட்டது. அதிக கனமழை பெய்து, வீராங்கால் கால்வாய் மூழ்கும்போது பாதிப்பு ஏற்படலாம். ஆனால் இம்முறை, ஷட்டர் கட்டமைப்பு கைகொடுத்துள்ளதாக, பகுதிமக்கள் கூறினர்.இந்த ஷட்டர் அமைக்கும் திட்டம், கிண்டி, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை பகுதியில், அடையாறு ஆற்றில் சேரும் வடிகால்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி முடியும் தருவாயில் உள்ளதால், அடுத்த மழைக்கு முழுதாக பயன் அளிக்கும் என, அதிகாரிகள் கூறினர்.