திரவுபதி கோபம், வேதனை, தவிப்பு நாட்டியத்தில் ரேவதி அசரடிப்பு
திரவுபதியின் வேதனையை வெளிப்படுத்திய 'நியதிவியதா' எனும் கதைக்களம், நாட்டிய கலைஞர் ரேவதி ஸ்ரீனிவாசன் அபிநயத்தில், மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடந்தது.யாகத்தீயில் தோன்றிய திரவுபதியின் பிறப்பை, தன் அற்புத திறமையால் ரேவதி விளக்கினார். கிருஷ்ணனின் குழல் ஓசை ஈர்த்துச்செல்ல, ஜதியின் அடவுகள் கிருஷ்ணனும், திரவுபதியும் விளையாடும் வகையில் அமையப்பெற்றது.'திரவுபதி பிறப்பின் ரகசியம் அறிந்தவர் நீயே கிருஷ்ணா' என்ற வரிகளுக்கு ஏற்ப, முத்தாயிஸ்வரமும், அதற்கேற்ற அமைப்பான கோர்வைகளும் அமைய, வரமா - சாபமா இந்த வாழ்க்கை என்ற கேள்வியோடு, திரவுபதி தத்தளித்தாள்.இன்பத்தையும், துன்பத்தையும் தன் முகபாவனையில் மாற்றி மாற்றி, அதன் சூழலை அற்புதமாக விவரித்தார் ரேவதி.தடாகத்தில் தேங்கி கிடந்த தண்ணீரில் தெரிந்த பிம்பத்தை பார்த்து, விண்ணில் இருந்த மீனை, அம்பால் துளைத்து போட்டியில் வென்ற அர்ஜுனன், திரவுபதியை கரம்பிடிக்கும் நிகழ்வு அரங்கேறியது.வெற்றியுடன் வந்த அர்ஜுனன், போட்டியில் பரிசு பெற்றுவிட்டதாக, தன் தாயிடம் தெரிவிக்கிறார். அதற்கு தாய், அப்பரிசு பெண் என்பதை அறியாமல், 'பெற்ற பரிசு பொருளை ஐந்து பேரும் பங்கிட்டுக்கொள்ளுங்கள்' என கூறிவிடுகிறார்.இதையடுத்து, திரவுபதியை பாண்டவர்கள் ஐவரும் மணம் முடித்த நிகழ்வை, நாட்டியத்தில் ஒரே ஆளாக மாறி மாறி நடித்து காட்டியபோது, அரங்கமே அதிசயித்தது.அடுத்ததாக, சகுனியின் பகடையாட்டத்தை நோக்கி நகர்ந்தது; அரங்கமே சோகத்தில் மூழ்கியது.சகுனி மற்றும் துரியோதனனின் அகங்கார சிரிப்பு வெளிப்படுகிறது. துச்சாதனன், திரவுபதியை அரங்கிற்குள் இழுத்து வர, ஐந்து கணவர்கள் இருந்தும் என்ன பயன்? இத்தனை பெரியோர் இருந்தும் என்ன பயன்? என்ற வேதனையில், வாடி தவிக்கிறாள் திரவுபதி.திரவுபதியின் துகில் உருவினான் துட்சாதனன். 'கோவிந்தா' என அபயம் கேட்கிறாள் திரவுபதி. துட்சாதனன் அவிழ்க்க அவிழ்க்க, சேலை நீண்டுகொண்டே இருக்கிறது. அவனே சக்தியின்றி கீழேவிழும் வரை நீள்கிறது துகில்.களையப்பட்ட ஆடைகளை ஆரத்தழுவி சுருட்டுகிறாள்; தன்மானம்காத்த அந்த துணி, கண்ணனின் விரலில் ஏற்பட்ட காயத்தை ஆற்ற கட்டப்பட்ட அந்த துண்டு துணியே என, முற்பயனை நினைவுகூர்கிறாள்; இன்ப வெள்ளத்தில் நன்றியை தெரிவிக்கிறாள்.அந்த சினத்தில் இட்ட சாபத்தால், போரில் தன் மகன்களை இழந்து, துச்சாதனன் வீழ்கிறான். அவள் சபதம் நிறைவேறிய தருணத்தில், அவனது குருதியால் தன் கூந்தலை முடிகிறாள்.கதையின் களத்தை அனந்தராமன் பாலாஜி, தன் வில்லிசையால் விளக்க, விஜயகுமாரின் நட்டுவாங்கமும், சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் தாள இசை கருவிகளின் வாசிப்பும், நாட்டியத்தின் கதைக்களத்தை பார்வையாளர்களிடம் அற்புதமாக கொண்டு சேர்த்தது.ரகுராமன் எழுத்தில், வானதி இசை அமைப்பில், ஜனனி ஹம்சனி குரலில், அரங்கமே அமைதியில் ஆழ்ந்தது.- மா.அன்புக்கரசி,ஈரோடு.