லாரி பேட்டரி, டயர் திருடிய ஓட்டுநர் கைது
திருவொற்றியூர், லாரியில், பேட்டரி, டயர் உள்ளிட்ட பொருட்களை திருடி விற்ற, ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். வேளச்சேரியைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்கு சொந்தமாக லாரி உள்ளது. இவரிடம், எண்ணுார், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்த சங்கர், 42, என்பவர், ஓட்டுநராக பத்து நாட்களுக்கு முன் பணியில் சேர்ந்துள்ளார். நான்கு நாட்களாக, லாரி லோடு இன்றி, மணலி விரைவு சாலை, சாத்தாங்காடு காவல் நிலையம் எதிரே, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், லாரியில் பொருத்தியிருந்த ஜி.பி.எஸ்., கருவி மூலம், லாரி நகர்வதை உரிமையாளர் கண்டுபிடித்தார். இது குறித்து ஓட்டுநர் சங்கரிடம் விசாரித்த போது, லாரியின் புதிய டயர்களை கழற்றி விலைக்கு விற்று விட்டு, பழைய டயர்களை மாட்டியதும், பேட்டரி, பழுதுபார்ப்பு உபகரணங்கள், டீசல் உள்ளிட்டவற்றை திருடி விற்றதை ஒப்புக் கொண்டார். இது குறித்து, உரிமையாளர் கணேஷ், சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், சங்கர், 42, என்பவரை, நேற்றிரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.