நேருக்கு நேர் மோதிய பைக் பள்ளி வேன் ஓட்டுநர் பலி
மணப்பாக்கம் : மணப்பாக்கம் அருகே, பைக்குகள் நேருக்குநேர் மோதிய விபத்தில், தனியார் பள்ளி வேன் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். பரங்கிமலை, துளசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சரத்குமார், 34; தனியார் பள்ளி வேன் ஓட்டுநர். இவர், மணப்பாக்கம் பிரதான சாலையில், நேற்று முன்தினம் இரவு, 'பஜாஜ் பல்சர்' பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்திசையில் 'ஹோண்டா ஹார்னட்' வாகனத்தில் வந்த கோவூரைச் சேர்ந்த விமல்குமார், 37, என்பவர் கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் வந்ததில், சரத்குமார் ஓட்டிச் சென்ற வாகனத்தின் மீது நேருக்குநேர் மோதினார். இதில், இருவரும் தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில், சரத்குமார் இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, விமல்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.