உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துரைப்பாக்கம் அரசு பள்ளியில் வெள்ளம் கிணறு வெட்டி வெளியேற்ற நடவடிக்கை 

துரைப்பாக்கம் அரசு பள்ளியில் வெள்ளம் கிணறு வெட்டி வெளியேற்ற நடவடிக்கை 

துரைப்பாக்கம்:துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, 3 ஏக்கரில், 40 வகுப்பறைகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு, 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது.இந்த பள்ளியை ஒட்டி, தெற்கு திசையில் ரேடியல் சாலை - இ.சி.ஆர்., சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. கிழக்கு திசையில் காலி இடம், மேற்கு திசையில் ஓ.எம்.ஆர்., உள்ளது. கடந்த மாதம், 15ம் தேதி பெய்த மழையில், பகிங்ஹாம் கால்வாய் செல்ல வேண்டிய மழைநீர், பள்ளி வளாகத்தில் தேங்கியது. அதோடு, ஊற்று அதிகரித்ததால் வகுப்பறைகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. மழை நின்றும் தண்ணீர் வடியவில்லை. மழை நின்ற பிறகும், பள்ளிக்கு ஒரு வாரம் வரை விடுமுறை விடும் நிலை ஏற்பட்டது.இதையடுத்து, மாநகராட்சி சார்பில், 100, 25, 10 குதிரை திறன் கொண்ட, 15 மோட்டார்கள், 10 டிராக்டர் மோட்டார்கள் வைத்து, மழைநீர் வெளியேற்றப்பட்டது. கனமழை பெய்யும்போதெல்லாம், இதே பிரச்னை தொடர்வதால், நிரந்தர தீர்வு காண, பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்தனர்.இங்கு, இரண்டு மற்றும் மூன்றடுக்கு கொண்ட, ஏழு கட்டடங்கள் தனித்தனியாக உள்ளன. மழையால் ஏற்படும் பாதிப்பை உணர்ந்து, ஏழு கட்டடங்களை இணைக்கும் வகையில், தரைத்தளத்தில், 3 அடி உயரத்தில் நடைமேடை அமைக்கப்பட்டது. இந்நிலையில், மழைநீர் தேக்க கிணறு வெட்டி அதில் மழைநீரை சேர்த்து, மோட்டார் கொண்டு இறைக்க, பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, 24 லட்சம் ரூபாய் செலவில், 10 அடி ஆழம், 8 அடி சுற்றளவில், மழைநீர் தேக்க கிணறு வெட்டப்பட உள்ளது. அதில், 10 குதிரை திறன் கொண்ட, இரண்டு நீர்மூழ்கி தானியங்கி மோட்டார்களும், மின்தடையின்போது இயங்கும் வகையில், ஒரு டீசல் மோட்டாரும் பொருத்தப்படும்.கிணற்றில் விழும் மழைநீர், 24 மணி நேரமும் தானியங்கி மோட்டார் வாயிலாக, பகிங்ஹாம் கால்வாயில் விடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்ட உள்ளது. இதற்கான மதிப்பீடு தயாரித்து, நிதி ஒதுக்கீடு செய்யும் துறையில் கோப்புகள் காத்திருக்கின்றன. நிதி ஒதுக்கியதும், உடனே பணி துவங்கும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை