தமிழகத்தில் புதிய முயற்சியாக இ - ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப்
சென்னை: தமிழகத்தில் புதிய முயற்சியாக, முதல்வர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டியில், 'இ - ஸ்போர்ட்ஸ்' எனும் ஆன்லைன் போட்டி, புதிய முயற்சியாக நேற்று நடத்தப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாநில அளவில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. நேற்று புதிய முயற்சியாக, பெரியமேடு நேரு உள் விளையாட்டரங்கத்தில், 'இ - ஸ்போர்ட்ஸ்' எனும் 'ஆன்லைன்' விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்க, 4,500க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர். இ.ஏ., - எப்.சி., - 25, ஸ்ட்ரீட் பைட்டர்ஸ், போக்கிமொன் யுனைட், பி.ஜி.எம்.ஐ., வாலரண்ட் மற்றும் மின் செஸ் ஆகிய ஆறு வகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. காலையில் நடந்த துவக்க விழாவில், எஸ்.டி.ஏ.டி., உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி பேச்சுகையில், ''தமிழக பாரம்பரிய விளையாட்டுகளுக்கு இணையாக, இ - ஸ்போர்ட்ஸ்களுக்கும் வரவேற்பு அளிக்கும் மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது,” என்றார். விளையாட்டுத்துறை செயலர் அதுல்யா மிஸ்ரா கூறுகையில், ''தமிழகம் இந்தியாவின் இ - ஸ்போர்ட்ஸ் புரட்சியின் மையமாக மாறியுள்ளது. கடந்தாண்டு 'டெமோ' பிரிவாக இருந்தது. இன்று உலகளாவிய போட்டியாக வளர்ந்துள்ளது,'' என்றார். நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் 14.72 லட்சம் மதிப்பில் தானியங்கி கூடைப்பந்து பயிற்சி இயந்திரத்தை, துணை முதல்வர் உதயநிதி, பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, 9.75 லட்சம் ரூபாய் பரிசு தொகையை வழங்கினார்.