உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நின்றிருந்த லாரியில் மோதிய ஆட்டோ மூதாட்டி பலி; எட்டு பேர் படுகாயம்

நின்றிருந்த லாரியில் மோதிய ஆட்டோ மூதாட்டி பலி; எட்டு பேர் படுகாயம்

திருவேற்காடு, சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரியில் ஆட்டோ மோதிய விபத்தில், குன்றத்துார் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோ ஓட்டுநர் மற்றும் ஏழு பெண் பயணியர் பலத்த காயமடைந்தனர். குன்றத்துார், திருப்பதி நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 47; ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று அதிகாலை, வழக்கம்போல குன்றத்துார் பேருந்து நிலையத்தில் இருந்து, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சவாரி சென்று கொண்டிருந்தார். ஆட்டோவில், எட்டு பெண் பயணியர் இருந்தனர். திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி, பாரத் பெட்ரோல் 'பங்க்' அருகே சென்றபோது, சாலையோரத்தில் நின்றிருந்த காலி கன்டெய்னர் லாரி மீது, எதிர்பாராத விதமாக ஆட்டோ வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோ அப்பளம்போல நொறுங்கியது. இதில் பயணித்த பெண் பயணியர், சாலையில் துாக்கி வீசப்பட்டனர். ஆட்டோவில் பயணித்த குன்றத்துார், சிக்கராய புரத்தைச் சேர்ந்த ஜெயா, 65, என்பவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மணிவண்ணன் உட்பட, ஆட்டோவில் பயணித்த ஜெயக்கொடி, சாவித்ரி, ரஜினி அம்மாள், வெள்ளையம்மாள், கன்னியம்மா, மாலதி மற்றும் அன்ஷார்மி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அனைவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்த ஜெயாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக, போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், கன்டெய்னர் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு, ஓட்டுநர் டீசல் வாங்க சென்றபோது விபத்து நடந்தது விசாரணையில் தெரிந்தது. விபத்து தொடர்பாக, திருவண்ணாமலை, செய்யாறு பகுதியைச் சேர்ந்த கன்டெய்னர் லாரி ஓட்டுநர் உமாபதி, 47, என்பவரிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ