35 சதவீதம் பணிகள் கூட முடியவில்லை ஜவ்வாக இழுக்குது காசிமேடு துறைமுக பணி
சென்னை:மத்திய - மாநில அரசுகளின் 150 கோடி ரூபாய் நிதி பங்கீட்டில், காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை நவீனப்படுத்த திட்டமிடப்பட்டது.அதன்படி, கப்பல் லிப்ட் வசதி, படகு பழுது பார்க்கும் கூடம், புதிய சுகாதார வளாகங்கள் அமைப்பது, திட - திரவ கழிவு மேலாண்மை அமைப்பு வசதிகள், மீன் விற்பனை, மீன்பிடி தொழில் சார்ந்த வேலைகள் மற்றும் மீன் பதப்படுத்துதல் உள்ளிட்ட, நவீனமயமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், கட்டுமான பணிகள் திட்டமிட்டபடி நடைபெறாமல், காலதாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, மீனவர்கள் கூறியதாவது:காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட, நவீனமயமாக்கும் உள் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 2023ம் ஆண்டு துவங்க வேண்டிய இப்பணிகள், சில காரணங்களால் கடந்தாண்டு தான் துவக்கப்பட்டன.மீன்பிடி தடை காலம் முடிவதற்குள், இப்பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துவிடும்.இவ்வாறு மீன்வள துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தற்போது, மீன்பிடி தடை காலம் அமுலுக்கு வந்து, முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், நவீனமயமாக்கும் பணிகள் ஜவ்வாக இழுக்கிறது.தற்போதைய நிலவரப்படி 35 சதவீதம் பணிகள் கூட நிறைவடையவில்லை. மீன்பிடி தடை காலம் முடிவடைய உள்ள நிலையில், மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் பணியில் ஈடுபடுவர். பணிகள் நிறைவடையாமல் உள்ளதால், மீனவர்களின் பணியில் சுணக்கம் ஏற்பட்டு, வாழ்வாதாரம் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. எனவே, பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.