உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குன்றத்துார் சாலைகளை 6 வழியாக மாற்ற எதிர்பார்ப்பு

குன்றத்துார் சாலைகளை 6 வழியாக மாற்ற எதிர்பார்ப்பு

குன்றத்துார், குன்றத்துார் நகராட்சியில் 70,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். குன்றத்துார் அருகே கோவூர், கெருகம்பாக்கம், மாங்காடு, திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய நகர்கள் உருவாக்கப்பட்டு, மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. போரூர், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, பல்லாவரம், திருமுடிவாக்கம் ஆகிய ஐந்து சாலைகள் இணையும் ஜங்ஷன் பகுதியாக குன்றத்துார் உள்ளது. மேலும், குன்றத்துார் அருகே வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலையும், தாம்பரம் -- மதுரவாயல் பைபாஸ் சாலையும் கடந்து செல்கின்றன. இதனால், குன்றத்துார் வழியே தொழிற்சாலை வாகனங்கள், பள்ளி, கல்லுாரி வாகனங்கள், அரசு பேருந்துகள் என, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ப குன்றத்துாரை இணைக்கும் முக்கிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை.குன்றத்துாருடன் முறையே போரூர், பல்லாவரம், பூந்தமல்லி, திருமுடிவாக்கம், ஸ்ரீபெரும்புதுார் இணையும் சாலைகள், நான்கு வழியாக உள்ளன.இந்த சாலைகளை ஒட்டியுள்ள 95 சதவீத வணிகக் கடைகளில், வாகன நிறுத்தும் வசதி இல்லை. இதனால், கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருவோர், சாலையின் இருபுறத்தையும் ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துகின்றனர். மேலும், குன்றத்துார் முருகன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் மற்றும் மேற்கண்ட பகுதியில் உள்ள மண்டபங்களில் முகூர்த்த நாட்களில் அதிக திருமணம் நடக்கின்றன.அந்த நேரத்தில் வாகனங்கள் ஒரே நேரத்தில் குன்றத்துார் உள்ளே வந்து செல்வதால், மிகக் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.எனவே, குன்றத்துாரை இணைக்கும் முக்கிய சாலைகளை ஆறு வழியாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'போரூரில் இருந்து குன்றத்துார் வழியே ஸ்ரீபெரும்புதுார் செல்லும் சாலையை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசனை நடக்கிறது. 'இதற்கு நிலம் எவ்வளவு கையகப்படுத்த வேண்டும் என்பதை கணக்கிட்டு அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளோம். மற்ற சாலைகள் பற்றி முடிவெடுக்கவில்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை